கள்ளக்குறிச்சி சத்யசாயிபாபாவின் 100வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட சத்யசாயி சேவா சமிதி சார்பில் சாயிபாபாவின் 100வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கடந்த 9ம் தேதி துவங்கிய நிகழ்ச்சியில் கருணை இல்லம் மற்றும் ஆலத்துார் புனித அன்னாள் இல்லங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மகப்பேறு பிரிவில் பிறந்த குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கினர். தொடர்ந்து நேற்று காலை 8:00 மணிக்கு கள்ளக்குறிச்சி ராஜா நகர் சத்யசாயி சேவா சமிதியில் அண்ணா நகர் அர்ச்சனா எலும்பு முறிவு மருத்துவமனை டாக்டர் சுரேஷ் பிரசாந்தி கொடி ஏற்றினார். சாயிபாபாவின் திரு உருவப்பட ஊர்வலம், சாயி பஜன், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. காலை 11:30 மணிக்கு விழுப்புரம் சத்யசாயி சேவா நிறுவனங்களின் மாவட்ட தலைவர் சாய் சரவணன் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். பிற்பகல் 12:30 மணிக்கு 500க்கும் மேற்பட்டவர்களுக்கு தொழிலதிபர் மணி அன்னதானம் வழங்கினார்.