உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை தீப திருவிழா முதல் நாள்; வைரகையுடன் அண்ணாமலையார்.. பக்தர்கள் நெய் குட காணிக்கை

திருவண்ணாமலை தீப திருவிழா முதல் நாள்; வைரகையுடன் அண்ணாமலையார்.. பக்தர்கள் நெய் குட காணிக்கை

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவின் கொடியேற்ற விழா நடந்தது. அப்‍பேது பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என கோஷம் எழுப்பி வழிபட்டனர். கொடியேற்றத்தில், அண்ணாமலையார் வைரகையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா, இன்று கொடியேற்றத்துடன், முதல் நாள் விழா தொடங்கியது.   இதையொட்டி இன்று அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மன் மற்றும் உற்சவர்கள்  பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு  சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை  செய்யப்பட்டது. பஞ்ச மூர்த்திகள், சுவாமி தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட   சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்க,  63 அடி உயர  தங்க கொடிமரத்தில்,   சதுர்த்தி திதி, பூராட நட்சத்திரம், சித்தயோகம் கூடிய காலை, 6:30  மணிக்கு   விருச்சிக லக்னத்தில் கொடியேற்றம் நடந்தது.  அப்போது பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என கோஷம் எழுப்பி வழிபட்டனர்.


சுவாமி வீதி உலா: தொடர்ந்து, அறியாமை என்னும்  இருளை போக்கி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் விழாவாக கொண்டாடப்படும், முதல் நாள் விழாவில், காலை,  10:00 மணியளவில், பஞ்ச மூர்த்திகள் வெள்ளி விமானத்தில் அலங்கரிக்கப்பட்டு, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு, 9:00 மணிக்கு, மூஷிக வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில்  வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், ஹம்சம் வாகனத்தில் பராசக்தி அம்மன், சிம்ம வாகனத்தில் சண்டிகேஸ்வரர் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும்  விழாவில்,  ஏழாம் நாளான, வரும், 30ம் தேதி பஞ்ச மூர்த்திகள் தேரோட்டமும், டிச., 3ல் அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.  தீப திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.


நெய் குட காணிக்கை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மகா தீபத்திற்கு பிரார்த்தனை நெய் குட காணிக்கை செலுத்தும் வகையில், இன்று கோவிலின் ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டிவாசல், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு விற்பனை நிலையம் திறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பிரார்த்தனை நெய் குட காணிக்கை செலுத்தியனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !