கீழடி அருகே கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு, சிலைகள் கண்டெடுப்பு
கீழடி; கீழடி அருகே அம்பலத்தாடி கிராமத்தில் கி.பி., 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, சிலைகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கீழடி, கொந்தகை, உள்ளிட்ட பகுதிகளில் பண்டைய காலங்களில் சதுர்வேதிமங்கலம் என அழைக்கப்பட்டது. பாண்டவர்களின் தாயாரான குந்திதேவி இப்பகுதியில் சில காலம் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. குந்திமா நகரம் என்பதுதான் கொந்தகை என மாறியதாக கூறப்படுகிறது. கீழடி, கொந்தகை உள்ளிட்ட பகுதிகளில் பெருமாள் கோயில்கள் அதிகம் உள்ளன. பிராமணர்கள் அதிகம் இப்பகுதியில் வசித்ததால் பெருமாள் கோயில்கள்உருவாகி இருக்கும் என்கின்றனர். மதுரை காமராசர் பல்கலை கழக முதுகலை மாணவர் வினோத், தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி ஆகியோர் அம்பலத்தாடி கிராமத்தில் உள்ள சிதிலமடைந்த பெருமாள் கோயிலை ஆய்வு செய்த பின் கூறுகையில் ; கி.பி., 12ம் நூற்றாண்டு காலகட்டத்தில் பிற்கால பாண்டிய மன்னர்கள் காலத்திய கோயில் இது, கடந்த சில வருடங்களுக்கு முன் கோயிலை மீண்டும் புதுப்பித்து கட்டுவதற்காக கிராமமக்கள் கல்வெட்டுகளை பெயர்த்து எடுத்து முண்டுகற்களாக பயன்படுத்தியுள்ளனர். சிதிலமடைந்த நிலையில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் உள்ளிட்ட 12 சிலைகள் சேதமடைந்த நிலையில் கிடைத்துள்ளன. சிதைந்த பெருமாள் சிலையின் கைகளில் சங்கு சக்கரம், அபய முத்திரை, வலம்பித முத்திரையுடன் காணப்படுகிறது. வெவ்வேறு கால கட்டங்களைச் சேர்ந்த சிலைகளாக உள்ளன. எனவே புதுப்பிக்கப்பட்டு மீண்டும் சிதிலமடைந்திருக்க வேண்டும், என்றனர்.