உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோயில் தெப்பத்திற்கு தடுப்புகள் அமைக்கப்படுமா பக்தர்கள் எதிர்பார்ப்பு

சிவன் கோயில் தெப்பத்திற்கு தடுப்புகள் அமைக்கப்படுமா பக்தர்கள் எதிர்பார்ப்பு

விருதுநகர்: விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் தெப்பத்தை சுற்றி தடுப்புகள் எதுவும் இல்லாததால் தண்ணீர் மாசடையும் நிலை உள்ளது. சிறுவர்கள் மீன்பிடிப்பதற்காக துாண்டில் போட்டு ஆபத்தான முறையில் ஈடுபடுகின்றனர்.


விருதுநகரில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நுாற்றாண்டுகள் பழமையான மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் வளாகத்தில் தெப்பம் அமைந்துள்ளது. மழைக்காலம் என்பதால் தற்போது தெப்பத்தில் தண்ணீர் நிறைந்து 16 அடி வரை உள்ளது.


இங்குள்ள தண்ணீரில் அதிக அளவில் மீன்கள் இருப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலரும் பொரி ஆகியவற்றை வாங்கி மீன்களுக்கு உணவாக கொடுத்து வருகின்றனர். ஆனால் பல ஆண்டுகளாக தெப்பத்தை சுற்றி கட்டப்பட்ட தடுப்புச்சுவர்கள் மீது எவ்வித தடுப்புகளும், படிக்கட்டுகளுக்கு கேட் என எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் அமைக்கப்படவில்லை.


தற்போது சிறுவர்கள் தடுப்புச்சுவர்கள் மீது அமர்ந்து துாண்டில் போட்டு மீன்களை பிடிக்க ஆபத்தான முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் சத்தம் போட்டால் சென்று விட்டு கோயில் நடை திறக்கப்படாத நேரங்களில் மறுபடியும் வந்து மீன்களை ஆபத்தான முறையில் பிடிக்கின்றனர். இதனால் சிறுவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.


எனவே கோயில் நிர்வாகம் தெப்பத்தை சுற்றியுள்ள தடுப்புச்சுவர் மீது தடுப்புகள் அமைத்து, தகர கதவுகளை அகற்றி புதிய கதவுகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !