உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உசிலம்பட்டி: கோயில்களில் கும்பாபிஷேகம்

உசிலம்பட்டி: கோயில்களில் கும்பாபிஷேகம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி, அலங்காநல்லுார், மேலுாரில் நடந்த கும்பாபிஷேகங்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


உசிலம்பட்டி, வகுரணி ஊராட்சி சந்தைப்பட்டி கிராமத்தில் சந்தனமாரியம்மன் கோயில் புதியதாக கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல்கால யாகசாலை பூஜைகள், இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகளுடன் நேற்று காலை கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் தெளித்து கும்பாபிஷேகம் செய்தனர்.


தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், மகாதீபாராதனை வழிபாடுகள் நடத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


அலங்காநல்லுார் மதுரை பொதும்பு வாசன் நகரில் அபிராமி தாயார், அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நவக்கிரகம் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடந்தது. நவ.29ல் முதல் கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை லட்சுமி பூஜை, காளை, குதிரைக்கு மரியாதை செய்து அஸ்வமேத யாகம் நடந்தது. 2ம்கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. குன்றின் மேல் பிரதிஷ்டை செய்த செந்திலாண்டவர் வேல், மயில், சேவலுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இறை ஊழிய மகளிர் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.


மேலுார் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நவ.27 முதல் யாகசாலை பூஜை துவங்கியது. நான்காம் கால யாகசாலை பூஜை முடிவில் சிவாச்சாரியார் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !