உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவன் திருநாமம் உச்சரிப்பே மோட்சம் பெறுவதற்கான வழி; சிருங்கேரி சுவாமிகள்

இறைவன் திருநாமம் உச்சரிப்பே மோட்சம் பெறுவதற்கான வழி; சிருங்கேரி சுவாமிகள்

‘‘இறைவன் திருநாமங்களை உச்சரிப்பதே மோட்சத்துக்கான வழி,’’ என, சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் அருளுரை வழங்கினார்.

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள், டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ளார். கோவில்களில் தரிசிக்கும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் சுவாமிகள், பக்தர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில், அருளுரை வழங்குகிறார்; இது, பக்தர்கள் பலரது மனதில் இருக்கும் குழப்பத்தின் சரியான வழிகாட்டுதலாக அமைந்துள்ளது.

சக பயணியர்தான் நாம் பெற்றோருடனான உறவு அவர்களின் மரணத்துடன் முடிந்துவிடுமா அல்லது அதற்குப் பிறகும் தொடருமா? நம் பெற்றோர் இறந்த பிறகும் நம்மை நினைவில் வைத்திருப்பார்களா?

ஸ்ரீஆச்சார்யார் : நாம் ஒரு ரயிலில் இரண்டு நாட்கள் பயணம் செய்யும்போது, உடன் பயணிப்பவர்களுடன் நட்பு கொள்கிறோம். சில சமயங்களில், அது மிகவும் நெருக்கமானதாகவும் இருக்கலாம். அவர்கள் ஒரு இடத்தில் இறங்கிவிடுவர். நாமோ அதற்குப் பிறகும் பயணத்தைத் தொடர வேண்டியிருக்கும். அப்போது நடந்த உரையாடல்களை நினைவுகூர்ந்து மகிழ்ச்சி அடையலாம். நமது இடத்தை அடைந்து, வழக்கமான பணிகளைத் தொடங்கும் போது, அந்த நினைவுகள் மெதுவாக மறையத் தொடங்குகின்றன. பெற்றோர், சகோதரர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மரணம் என்பது இந்த அனுபவத்தைப் போன்றதுதான். நாம் அனைவரும் சக பயணிகளாக இருக்கிறோம். ஒவ்வொருவரும் அவரவர் நேரத்திற்கு, அவரவர் பாதையில் பயணத்தைத் தொடர வேண்டும். ஓர் உறவு என்பது உடல் இருக்கும் வரை மட்டுமே நீடிக்கும்.

அடுத்த நிலை எப்படி? நாம் இறந்த பிறகு, நம் பெற்றோருடன் சேர்ந்து அவர்களுடன் வாழ ஆரம்பிப்போமா?

ஸ்ரீ ஆச்சார்யார்: ரயிலில் இருந்து இறங்கிய பிறகு, ஒரு பேருந்தில் ஏறி வேறு ஒரு இடத்துக்கு செல்லலாம். மற்றவர், வேறு ஒரு ரயிலுக்கு மாறி தங்கள் பயணத்தைத் தொடரலாம். ஒருவர், ரயிலில் இருந்து வெளியேறி விமான நிலையம் சென்று வேறு ஒரு இடத்திற்குப் பறக்கலாம். ஆகவே, யார் என்ன செய்தார்கள், எதற்கு அவர்கள் தகுதியானவர்கள் என்பதைப் பொறுத்தே அடுத்த நிலை அமையும்.

விடுபடுவதற்கு வழி இந்த எண்ணங்கள் அனைத்தும் பெரும் துயரத்தை அளிக்கின்றன. இதிலிருந்து விடுபட வழி என்ன?

ஸ்ரீஆச்சார்யார்: மோட்சம் மட்டுமே ஒரே வழி; இறைவன் திருநாமங்களை உச்சரிப்பதே மோட்சத்துக்கான வழி. தினமும் உங்களால் முடிந்த அளவு, ‘ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம’ என்ற திருநாமத்தை உச்சரியுங்கள். இவ்வாறு, பக்தர்கள் சந்தேகங்களுக்கு விடையளித்தார்.

பெர்சராயில் உள்ள வைகுண்டநாத் மந்திர்; ஆர்.கே.புரத்தில் உள்ள பாலாஜி மந்திர் ஆகிய கோவில்களுக்கு விஜயம் செய்தார். ‘மோட்சப் பாதையில் மனித இனம் முன்னேற, கர்மம், பக்தி மற்றும் ஞானம் ஆகிய மூன்று யோகங்களும் எவ்வாறு மிகவும் இன்றியமையாதவை’ என்பது குறித்து அருளுரை வழங்கினார்.   – நமது நிருபர்–: 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !