திருப்பரங்குன்றத்தில் பலத்த பாதுகாப்பு; மலைக்கு கொண்டு செல்லப்பட்டது தீப கொப்பரை
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் மலை மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவதற்காக மலைக்கு கொண்டு தாமிர கொப்பரை செல்லப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேற்றுமுன்தினம் தீர்ப்பளித்தார். இதனை முன்னிட்டு தீபக்கொப்பரை சிறப்பு பூஜைகளுக்கு பின் இன்று மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோயில் சார்பில் ஆண்டுதோறும் மலை மேல் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின்மேல் மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர தீப கொப்பரை வைத்து அதில் 300 லிட்டர் நெய், 150 மீட்டர் காடா துணியில் திரி தயாரித்து, 5 கிலோ சூடம் மூலம் தீபம் ஏற்றப்படும். அந்த தீப தாமிர கொப்பரை 1993 முதல் கடந்த ஆண்டுவரை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு டிச. 3ல் மலை மேல் மஹா தீபம் ஏற்ற புதிய தாமிர கொப்பரை பயன்படுத்தப்பட உள்ளது. அதற்காக 4 அடி உயரம், மேல்பகுதி இரண்டரை அடி அகலத்திலும், அடிப்பகுதி ஒன்னேமுத்கால் அடி அகலத்திலும், 70 கிலோ எடையில், 400 லிட்டர் நெய் கொள்ளளவு கொண்ட புதிய தாமிர தீப கொப்பரை திருவண்ணாமலையில் தயாரிக்கப்பட்டது. இந்த தீப கொப்பரை இன்று சிறப்பு பூஜைகளுக்கு பின் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து இன்று மாலையில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெற உள்ள நிலையில், திருப்பரங்குன்றம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.