ஒரே கருவறையில் சிவனும், விஷ்ணுவும் அருள்பாலிக்கும் கோபேஷ்வர் கோவில்
கர்நாடகா - மஹாராஷ்டிரா மாநிலங்களின் எல்லையில் உள்ள கோலாப்பூர் என்றாலே, அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மஹாலட்சுமி கோவில். ஆனால், கோலாப்பூரில் இன்னொரு அரிய கோவிலும் உள்ளது. கோலாப்பூர் அருகே கித்புரா கிராமத்தில் கிருஷ்ணா ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது கோபேஷ்வர் கோவில். தாட்சாயினியின் மரணத்தை கேட்டு கோபம் அடைந்த சிவன், தட்சனின் யாகத்தை அழித்தார்.
சிவனின் கோபத்தை தணிக்க, விஷ்ணு தானே லிங்க வடிவில் துபேஸ்வரராக மாறி, சிவன் அருகே அமர்ந்தார். இந்தக் கோவில் கருவறையில் சிவனும், விஷ்ணுவும் அருகருகே அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலின் சம்பிரதாயப்படி சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் தேங்காய் பாலை நெய்வேத்தியமாக படைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர். இக்கோவில், 12ம் நுாற்றாண்டில் சிலஹார வம்சத்தை சேர்ந்த காந்தாராதித்யரால் கட்டப்பட்டு உள்ளது.
சொர்க்க மண்டபம், சபை மண்டபம், மூலஸ்தானம் கோவிலின் முக்கிய ஈர்ப்பாக உள்ளது. முழு பவுர்ணமி நாளில் பக்தர்கள் இந்த கோவிலுக்கு சென்றால், மரணத்திற்கு பின் சொர்க்கத்திற்கு செல்வர் என, நம்பப்படுகிறது. கோவிலில் உள்ள அனைத்து சாமி சிலைகளும். கருப்பு பசால்ட் கல்லில் செதுக்கப்பட்டவை. அழகான, நுணுக்கமான வேலைப்பாடுகள், கன்னட கல்வெட்டுகள் போன்றவை கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. தினமும் காலை, 6:00 முதல் இரவு 8:00 மணி வரை இக்கோவிலின் நடை திறந்திருக்கும்.
எப்படி செல்வது
* பெங்களூரில் இருந்து 660 கி.மீ.,
* கோலாப்பூரில் இருந்து 60 கி.மீ.,
* பெலகாவியில் இருந்து 112 கி.மீ.,
* பெங்களூரில் இருந்து கோலாப்பூருக்கு அரசு, ஆம்னி பஸ் சேவை உள்ளது.
* ரயிலில் சென்றால் கோலாப்பூர் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும்