உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் மலைக்கோவில், பச்சரிசி மலையில் மகா கார்த்திகை தீபம்

திருத்தணி முருகன் மலைக்கோவில், பச்சரிசி மலையில் மகா கார்த்திகை தீபம்

திருத்தணி: திருத்தணி முருகன் மலைக் கோவிலில், நேற்று, கார்த்திகை மாத கிருத்திகை விழாவை ஒட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு பால், பன்னீர் விபூதி, போன்ற பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.


தொடர்ந்து மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல், பச்சைமாணிக்க மரகத கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது. காலை, 9:00 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் முருகபெருமானுக்கு பஞ்சாமிர்த சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் முருகபெருமான் வள்ளி– தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில், தேர்வீதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, அங்கு வைக்கப்பட்ட சொக்கப் பனையில், நெய் தீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில், கோவிலின் எதிரில் உள்ள, பச்சரிசி மலையில், பெரிய அகல் விளக்கில், 350 கிலோ நெய், 10 மீ., நீளமுள்ள திரியில், மகா தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் ‘அரோகரா, அரோகரா’ என, பக்தி முழக்கமிட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறக்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ்பாபு செய்திருந்தனர். l பள்ளிப்பட்டு அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை நெல்லிக்குன்றம் மலைக்கோவில் மற்றும் ஊர்க்கோவிலில் அருள்பாலிக்கும் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவில்களில் நேற்று கிருத்திகை உத்சவம் கொண்டாடப்பட்டது. காலை 8:00 மணிக்கு மூலவர் மற்றும் உத்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. நெல்லிக்குன்றம் மலைக்கோவிலில் மாலை 6:00 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து உத்சவர் முருகப்பெருமான் உள்புறப்பாடு எழுந்தருளினார். மலைக்கோவிலில் பெண்கள், அகல்விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !