உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நுாற்றுக்கணக்கான கும்பாபிஷேகம் நடத்தி என்ன பயன்? தீபம் ஏற்றும் பிரச்னையில் ஓட்டுகளை இழக்கும் தி.மு.க.,

நுாற்றுக்கணக்கான கும்பாபிஷேகம் நடத்தி என்ன பயன்? தீபம் ஏற்றும் பிரச்னையில் ஓட்டுகளை இழக்கும் தி.மு.க.,

அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில், நீதிமன்றம் மீண்டும், மீண்டும் உத்தரவிட்டும், மலையில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத பிரச்னை, வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,விற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.


மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வழக்கமாக தீபம் ஏற்றும் மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் தவிர, அருகே உள்ள தீபத்துாணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஹிந்துக்களின் நெடுநாள் கோரிக்கை. நுாறாண்டுகளுக்கு முன் நிலவிய பாரம்பரியத்தை மீண்டும் கொண்டு வந்து, திருவண்ணாமலை போல தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஹிந்துக்களின் விருப்பம். இது தொடர்பாக வழக்குகள் நடந்து வந்த நிலையில், உச்சிப்பிள்ளையார் கோவில் தவிர, தீபத்துாணிலும் தீபம் ஏற்றலாம் என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.


மூன்று முறை உத்தரவு


மலை மீதுள்ள தர்காவிற்கு, 50 மீ., துாரத்தில் தீபத்துாண் இருக்கிறது. இவற்றையெல்லாம் ஆராய்ந்து, நேரடி கள ஆய்வு செய்து தான் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபம் ஏற்ற திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலருக்கு உத்தரவிட்டிருந்தார். அப்போது, இந்த வழக்கில் தர்கா நிர்வாகமும், மதநல்லிணக்கம் கருதி நீதிபதி தீர்ப்பிற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. எனவே, கார்த்திகை நாளில் தீபம் ஏற்றப்படும் என ஆவலாக இருந்த பக்தர்களின் மனது புண்படும்படியாக, அறநிலையத்துறை தீபம் ஏற்றாமல் பின்வாங்கியது. இதை அவமதிப்பாக கருதிய உயர்நீதிமன்ற மதுரை கிளை, மனுதாரரே மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்போடு தீபம் ஏற்றலாம் என, உத்தரவிட்டது. அதற்கு, மனுதாரரான ராம ரவிகுமார், ஏற்பாடு செய்த வேளையில், கோர்ட் உத்தரவை அமல்படுத்த எண்ணம் இல்லாத தமிழக அரசு, உடனடியாக அங்கு 144 தடை உத்தரவை பிறப்பித்தது. இதனால் மலை மீது ஏறி தீபம் ஏற்ற முடியவில்லை. நேற்று, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 144 தடை உத்தரவை விலக்கி, தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றார். இந்த உத்தரவையும் மதிக்காத தமிழக அரசு, தீபம் ஏற்ற அனுமதிக்காமல் பிடிவாதம் பிடித்தது. மொத்தத்தில் உயர்நீதிமன்றம் மூன்று முறை உத்தரவிட்டும், ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், தி.மு.க., அரசு தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை.


எம்.பி.,யின் பூச்சாண்டி


ஹிந்து பக்தர்களுக்கு சாதகமாக உத்தரவு வந்த உடனே, முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர், கோவில் நகரான மதுரையின் மார்க்சிஸ்ட் கம்யூ., எம்.பி., வெங்கடேசன் தான். நடுநிலையோடு இருக்க வேண்டிய இந்த எம்.பி., கலவரம் ஏற்படும் என்று பூச்சாண்டி காட்டினார். அடுத்து, தி.மு.க.,வின் இன்னொரு கூட்டணியான காங்கிரஸ். இந்த இரண்டு கட்சிகளும் சிறுபான்மையினர் ஓட்டுகளுக்கு ஆசைப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அதை அப்படியே ஏற்று தி.மு.க, அரசும் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு, வரும் தேர்தலில் அவர்களின் ஓட்டுகளை இழக்க போகிறது. ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி தி.மு.க., என்று பெயர் வாங்கியிருப்பதை மாற்றுவதற்காக, இந்த ஆட்சி பொறுப்பேற்றதும் நுாற்றுக்கணக்கான கோவில்களில் கும்பாபிஷேகங்களை நடத்தியது. 


அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் பல்வேறு பணிகள் நடந்தன. இருந்தாலும் என்ன பயன்? 


கோர்ட் உத்தரவுப்படி, பிரச்னையை பெரிதாக்காமல், அறநிலையத்துறை தீபம் ஏற்றியிருந்தால், ஒரே நாளில் இது முடிந்திருக்கும். அடுத்த நாளில் இதைப்பற்றி யாரும் பேசப்போவது இல்லை.  அரசுக்கு யாரோ கொடுத்த ஐடியாவால், அரசின் பிடிவாத முடிவால், இப்போது இது அரசியலாகி விட்டது. மதுரை மட்டுமல்லாது தேசிய அளவில் இது விவாதிக்கப்படுகிறது. ஒரே நாளில் முடிய வேண்டிய விஷயத்தை தேர்தல் வரை பேச கட்சிகளுக்கு தி.மு.க., வாய்ப்பு கொடுத்துள்ளது. உணர்வுபூர்வமான பிரச்னையில் நடுநிலை ஹிந்துக்களின் ஆதரவை கூட ஒரே நாளில் தி.மு.க., இழந்து விட்டது.


தி.மு.க.,வினர் கடுப்பு


மதுரை தி.மு.க.,வினர் கூறியதாவது: மதுரையில் மிக சொற்பமான ஓட்டு வங்கி வைத்துள்ள மார்க்., -- கம்யூ., கட்சியை, கூட்டணி என்ற பெயரில் ஏற்கனவே நாங்கள் தான் துாக்கி சுமந்து கொண்டிருக்கிறோம். எங்களோடு கூட்டணியில்லாமல் இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி பெற முடியாது. தி.மு.க., என்ன தான் சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்படுகிறது என தன்னை அடையாளம் காட்டிக்கொண்டாலும், பெரும்பான்மையான ஹிந்து ஓட்டுகளால் தான் வெற்றி சாத்தியம் என, தி.மு.க.,வுக்கும் தெரியும். வெங்கடேசன் எம்.பி.,யாகி டில்லி போய் விட்டார். சட்டசபை தேர்தலில், ஹிந்துக்களை நாங்கள் தானே எதிர்கொள்ள வேண்டும். இவரது எதிர்ப்பு குரலுக்கு அரசு அடிபணிந்து, தீபம் ஏற்றாததால் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கான ஓட்டுகள் பாதிக்கும். கம்யூனிஸ்ட்களுக்கு சட்டசபை தேர்தலால் ஒன்றும் ஆகிவிட போவதில்லை. பாதிக்கப்படுவது நாங்கள் தானே. முதல்வர் ஸ்டாலின் உத்தரவால், மதுரையில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என, அமைச்சர் மூர்த்தி பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு வரும் நிலையில், வெங்கடேசனின் ஹிந்து விரோத கருத்து முட்டுக்கட்டையாக அமையும். இவ்வாறு கூறினர்.


த.வெ.க., காரணமா?


வரும் தேர்தலில் தி.மு.க.,விற்கு முக்கிய போட்டியாக த.வெ.க., களம் இறங்குகிறது. தி.மு.க., பெற வேண்டிய, கணிசமான கிறிஸ்துவ சிறுபான்மையினரின் ஓட்டுகள் த.வெ.க., பக்கம் செல்லாமல் இருக்க, சிறுபான்மையினருக்கு நாங்கள் எப்போதும் ஆதரவு என, காட்டிக்கொள்ள தி.மு.க., அரசு இந்த முடிவை எடுத்திருக்கலாம்.  இன்னும் சில மாதங்களில் தேர்தல் வராமல் இருந்திருந்தால், கோர்ட் உத்தரவிட்டது; தீபம் ஏற்றினோம் என்று சொல்லி, சிறுபான்மையினரை சமாளித்திருக்கும். ஹிந்துக்கள் எப்படியும் நமக்கு ஓட்டளிப்பர்; சிறுபான்மையினர் ஓட்டுகள் சிதறாமல் கிடைக்க வேண்டும் என்பதே முக்கியம் என தி.மு.க., நினைப்பதால், ஆன்மிக விஷயத்தை அரசியலாக்கி விட்டது என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.


இதே பிரச்னை: திண்டுக்கல் பெருமாள் கோவில்பட்டி கோவில் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதிலும் இதே பிரச்னை தான். பெரும்பான்மையாக கிறிஸ்துவர்கள் வாழும் அங்கு, கோர்ட் உத்தரவிட்டும், தீபம் ஏற்ற அரசு அனுமதிக்கவில்லை. அங்கும் 144 தடை உத்தரவு திடீரென பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைகளால் கலெக்டர்களாகவும், எஸ்.பி.,யாகவும் இருக்கும் ஐ.ஏ.எஸ்.,- - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கும் கோர்ட் அவமதிப்பை எதிர்கொள்ளும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. இவை அவர்கள் பணிக்காலத்தில், கரும்புள்ளியாகவே கருதப்படும். எத்தனை கோர்ட் அவமதிப்பானாலும் பரவாயில்லை; சிறுபான்மை ஓட்டு தான் முக்கியம் என அரசு நினைக்குமானால், வரும் தேர்தலில் பெரும்பான்மை ஹிந்துக்களின் ஓட்டுகளை தி.மு.க., இழக்க நேரிடும் என்பதே அரசியல் ஆய்வாளர்கள் கருத்து.


தி.மு.க.,வின் கபட நாடகம்


திருப்பரங்குன்றம் விவகாரத்தில், உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்த தவறி, கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க, கபட நாடகமாடும் தி.மு.க., அரசின் செயல் கண்டனத்திற்குரியது.- எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர், சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து, தேவையற்ற பிரச்னைக்கு வழிவகுத்த தி.மு.க., அரசுக்கு, மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்.

-பழனிசாமி,அ.தி.மு.க., பொதுச்செயலர்


அதிகாரம் நிலையானது அல்ல: ஹிந்துக்களுக்கு எதிராக, மத நம்பிக்கைகளுக்கு எதிராக, அறநிலையத்துறையே கோர்ட்டில் அப்பீல் செய்கிறது என்றால், அறநிலையத்துறை என்பதே கோவிலை அழிக்கும் அறங்கெட்ட துறையாக செயல்பட்டு வருகிறது என்பதற்கு இதுவே ஆதாரம். ஆட்சி, அதிகாரம் நிலையானது இல்லை. ஆயிரம் தடைகள் வந்தாலும், நீதி வென்றே தீரும். தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நீதி துறையை அவமதிப்பதை ஹிந்து முன்னணி கண்டிக்கிறது. - காடேஸ்வரா சுப்ரமணியம் ,ஹிந்து முன்னணி தலைவர்


அறப்போராட்டம் தொடரும்: திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் மாற்று மத அமைப்புகளுக்கு தி.மு.க., துணை போகக் கூடாது. மிக தெளிவாக தீர்ப்பளித்த பின்பும், நீதிமன்றத்தையும், நீதிபதியையும் அவமதிப்பதும், மிரட்டுவதும், தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்த துாண்டுவதும் தி.மு.க., அரசு, தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்வதாகும். ஹிந்து இயக்க தொண்டர்களின் மீது தமிழக அரசு அடக்குமுறையை தொடர்ந்தால், தமிழகம் முழுக்க ஜனநாயக அறப்போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். -- அர்ஜுன் சம்பத் , ஹிந்து மக்கள் கட்சி தலைவர்


மரபு தொடர வேண்டும்: மதம் சம்பந்தப்பட்ட விவகாரங்களால், காலங்காலமாக எந்த மரபுகள் பின்பற்றப்பட்டு வந்தனவோ, அந்த மரபுகள் பின்பற்றப்பட வேண்டும். இதுதான் அனைவருக்கும் நல்லது. மத விஷயங்களில் அரசாக இருந்தாலும், கட்சிகளாக இருந்தாலும் அரசியல் செய்யக் கூடாது. இதுதான் அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு. - ஜெயகுமார் , அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்


மதக்கலவரத்தை துாண்டும் தி.மு.க.: தி.மு.க.,வின், நான்கரை ஆண்டு கால ஆட்சியில் பொதுமக்கள் சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்து வருகின்றனர். தமிழகத்தில் அனைத்து மக்களையும் சமமாக பாவிக்க வேண்டும். ஆனால், மக்களிடம் பேதத்தை ஏற்படுத்தி, மதக்கலவரத்தை துாண்ட தி.மு.க., தயராகி விட்டது. தி.மு.க., ஓட்டு அரசியல் செய்வதால் இந்த பிரச்னைகள் தலைதுாக்கியுள்ளன. - பொள்ளாச்சி ஜெயராமன்அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,


- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !