இடைக்காட்டூர் சர்ச்சில் பழமை மாறாமல் ரூ.1.57 கோடி செலவில் மராமத்து பணி
மானாமதுரை; மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் சர்ச்சில் பழமை மாறாமல் ரூ.1.57 கோடி செலவில் மராமத்து செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் கடந்த 1894ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் கோதிக் கட்டடக்கலையில் கட்டப்பட்ட திரு இருதய ஆண்டவர் சர்ச் 135 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும்.இங்கு தேவ தூதர்களின் 153 சித்தரிப்புகள் காணப்படுகின்றன. பெரும்பாலான சர்ச்சுகளில் இயேசு தன் இரு கைகளாலும் ஆசீர்வாதம் செய்வது போலவே அமைக்கப்பட்டிருக்கும்,ஆனால் இங்குள்ள சர்ச்சில் மட்டுமே இயேசு தன் இதயத்தை திறந்து காட்டிய நிலையில் உள்ளது. இது போன்று உலகிலேயே 3 இடங்களில் மட்டுமே உள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள மார்க்கரேட் மேரியின் கான்வென்ட் மற்றும் ரீம்ஸ் நகரில் உள்ள கதீட்ரல் சபையிலும் உள்ளது. இது போன்ற பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த சர்ச் அமைந்துள்ள இடைக்காட்டூரை தமிழக அரசு பல ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா தளமாக அறிவுள்ளது.இந்நிலையில் சர்ச்சை பழமை மாறாமல் புதுப்பிக்க தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.1.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அருங்காட்சியம் கட்டும் பணியை முதல்வர் ஸ்டாலின் இங்கு வந்து துவக்கி வைத்தார். தற்போது சர்ச் வளாகம் முழுவதும் வர்ணம் பூசும் பணி மற்றும் பழமை மாறாமல் சேதமடைந்த கண்ணாடிகளை புதுப்பிப்பது, மேற்புறம் உள்ள ஓடுகளில் மழை நீர் தேங்காதவாறு அதற்கு மேல் மெல்லிய தகடுகளை கொண்டு மழை நீரை வெளியேற்றுவது,கிரானைட் கற்களில் பாலிஷ் போடுவது,ஒலி,ஒளி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருத்தல அருள் பணியாளர் ஜான் வசந்தகுமார் கூறியதாவது, இடைக்காட்டூர் சர்ச்சில் மாதந்தோறும் நடைபெறும் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும் திருப்பலியில் தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்து வருகின்றனர். மிகப் பழமை வாய்ந்த சர்ச்சில் பழமை மாறாமல் மராமத்து செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து ரூ.1.57 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து ஆய்வு செய்யும்போது மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம் மற்றும் பங்குத்தந்தைகளிடம் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து தற்போது பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.