தேய்பிறை ஏகாதசி விரதம்: பெருமாளை வழிபட பாவங்கள் நீங்கி ஆனந்த வாழ்வு கிடைக்கும்!
கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு ரமா ஏகாதசி என்று பெயர். ஒருவர்க்கு மட்டுமின்றி, ஊருக்கே, உலகுக்கே வளமையருளும் நாள் இது. இன்று விரதம் இருந்து பெருமாளுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடுதல் சிறப்பு. ரமா ஏகாதசியின், பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கேட்பவர் தன் எல்லா பாவ விளைவுகளில் இருந்து விடுபட்டு பகவான் விஷ்ணுவின் பரமத்தில் ஆனந்தமாக வாழ்வார்.
கயிலைநாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரதமகிமையை எடுத்துச் சொன்னார். பார்வதி! ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார். உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே, அனைத்து ஏகாதசிகளிலும் பலர் விரதம் இருக்கின்றனர். இன்று பெருமாளை வழிபட்டு மகாவிஷ்ணுவின் கருணையைப் பெறுவோம்..!