திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் பஞ்சலோகத் திருமேனிகள் அர்ப்பணிப்பு
திருப்பூர்: திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலுக்கு, பூஜிக்கப்பட்ட 63 நாயன்மார்களின் பஞ்சலோகத் திருமேனிகள் நேற்று அர்ப்பணிக்கப்பட்டன.
திருப்பூர், கொங்கு குலால உடையார் அறக்கட்டளை ஏற்பாட்டில் 60 உபயதாரர்கள் கொண்டு 63 நாயன்மார்களின் பஞ்சலோகத் திருமேனிகள் உருவாக்கப்பட்டன. இவற்றுக்கு 25 வாரங்கள் தேவாரம், திருவாசகம் முற்றோதல் செய்து சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இவற்றை விஸ்வேஸ்வரர் கோவிலுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, தாராபுரம் ரோடு, கோட்டை மாகாளியம்மன் கோவிலிருந்து சிறப்பு பூஜைகள் செய்து, திருவீதியுலா துவங்கியது. முக்கிய ரோடுகள் வழியாக சிவனடியார்கள், உபயதாரர்கள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் இவற்றை விஸ்வேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கு சமய பெரியோர்கள், முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள், பக்தர்கள் முன்னிலையில் திருமேனிகளுக்கு சிறப்பு மகா தீபாராதனை நடத்தப்பட்டது. கோவில் நிர்வாகிகள், அறங்காவலர்கள், அறநிலையத் துறையினர் அவற்றைப் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. கூனம்பட்டி ஆதினம் நடராஜ சுவாமிகள், பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், தென் சேரிமலை ஆதினம் முத்துசிவ ராமசாமி அடிகளார், பவானி தியாகராசர் ஆகியோர் அருளாசி வழங்கினர். தெற்கு எம்.எல்.ஏ. செல்வராஜ், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்ரமணியம், கோவில் அறங்காவலர் குழு தலைவர் சங்குராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை கொங்கு குலாலர் அறக்கட்டளை நிர்வாகிகள் தட்சிணா மூர்த்தி, லட்சுமி நாராயணன், சுந்தரராஜ் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.