உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரத்தில் திருமுறை விழா நாளை துவக்கம்: மூன்று நாட்கள் நடக்கிறது

காஞ்சிபுரத்தில் திருமுறை விழா நாளை துவக்கம்: மூன்று நாட்கள் நடக்கிறது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், திருமுறை திருவிழா எனப்படும், ஆன்மிக பெருவிழா, நாளை துவங்கி, வரும் 21ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழாவில், 18 ஆதீனங்கள், 10 குருமார்கள், 108 ஓதுவார்கள், சிவனடியார்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


விழா ஒருங்கிணைப்பாளர்கள் பச்சையப்பாஸ் சில்க்ஸ் பிரபு,ஜோதீஸ் ரெசிடென்சி மற்றும் ரெஸ்டாரான்ஸ் முருகேஷ் உள்ளிட்ட ஒருங்கிணைப் பாளர்கள் கூறியதாவது: காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள சித்தீஸ்வரர் மஹால், பச்சையப்பாஸ் சில்க்ஸில், மூன்று நாட்கள் நடக்கும் திருமுறை திருவிழா, நாளை, காலை 8:00 மணிக்கு துவங்குகிறது. அதை தொடர்ந்து, மணமாலை நிகழ்வு, வரன்களை அறிமுகப்படுத்துதல் நிகழ்வும், காலை 10:00 மணிக்கு நகைச்சுவை பட்டிமன்றம், மாலை 4:00 மணிக்கு கலைநிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது. இரண்டாம் நாள் விழாவான, நாளை மறுநாள், காலை 8:00 மணிக்கு நந்தி கொடி ஏற்றப்பட்டு விழா துவங்குகிறது. சிறப்பு விருந்தினர்களின் வாழ்த்துரையும், காலை 9:00 மணிக்கு சிவதிரு தாமோதரன் திருமுறை விண்ணப்ப பெருவிழாவும் நடைபெறுகிறது.


மாலை 3:00 மணிக்கு பழநி சண்முக சந்தர தேசிக ஓதுவாமூர்த்தி, நெய்வேலி சிவராஜபதி ஓதுவாமூர்த்தி ஆகியோரின் திருமுறை இன்னிசையும், மாலை 3:30 மணிக்கு செங்கோல் ஆதீனத்தின் வரவேற்பு நிகழ்ச்சியும், மாலை 4:00 மணிக்கு அருணை பாலறாவாயனுக்கு, வேளாளர் குல மாணிக்கம் சைவ சித்தாந்தம் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. நிறைவு நாளான வரும் 21ம் தேதி நடைபெறும் விழாவில், 18 ஆதீனங்கள், 10 குருமார்கள், 108 ஓதுவார்கள் பங்கேற்கின்றனர். இதில், காலை 5:00 மணிக்கு, தீட்சை பெற்ற சிவாச்சாரியார்கள் சிவபூஜை செய்கின்றனர். தொடர்ந்து மங்கல இசை, இறைவணக்கம் வரவேற்புரை நடக்கிறது. காலை 8:00 மணிக்கு ஓதுவார்களால் திருமுறை பேழை வழிபாடும், 8:30 மணிக்கு சிவாச்சாரியார் காமேஸ்வர குருக்கள் தலைமையில், ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கல்யாண உத்சவமும், காலை 8:45 மணிக்கு தமிழ் புலவர் கு.ஞானசம்பந்தம், திருக்கல்யாண தொகுப்பு உரை நிகழ்த்துகிறார். காலை 10:30 மணிக்கு மாங்கல்யதாரம், 10:45 மணிக்கு ஓதுவார்களின் திருமுறை இன்னிசை நடக்கிறது. காலை 11:10 மணிக்கு புதிய நீதிகட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், வேல்ஸ் பல்கலை கழகம் வேந்தர் ஐசரி கணேஷ், அனைத்துலக முதலியார் பிள்ளைமார் சங்க நிறுவன தலைவர் அருணாச்சலம், தலைவர் செல்வம் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுகின்றனர். மதியம் 12:00 மணிக்கு ஆதீனங்களிடம் ஆசீர்வாதம், மதியம் 1:00 மணிக்கு திருக்கல்யாண உணவு விருந்தும், மதியம் 2:00 மணிக்கு ஓதுவார்களுக்கும், சிவபூஜை செய்த சிவாச்சாரியார்களுக்கும் சிறப்பு செய்விக்கப்படுகிறது. விழா ஏற்பாட்டை அனைத்துலக முதலியார் பிள்ளைமார் சங்க தலைமை நிர்வாகிகள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், விழா ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !