உடுமலை செல்வ விநாயகர் கோவிலில் மகா பெரியவா அனுஷ பூஜை
உடுமலை: உடுமலை ஜி.டி.வி., லே – அவுட், செல்வவிநாயகர் கோவிலில், காஞ்சி மகா பெரியவா அனுஷ பூஜை நடந்தது. ஒவ்வொரு மாதமும், காஞ்சி மகா பெரியவா அனுஷ நட்சத்திரத்தை முன்னிட்டு, அனுஷ பூஜை உடுமலை பகுதியிலுள்ள கோவில்களில் நடந்து வருகிறது. மார்கழி மாத அனுஷ நட்சத்திரத்தையொட்டி, அனுஷ பூஜை, ஜி.டி.வி., லே–அவுட், செல்வவிநாயகர் கோவிலில் நடந்தது. காலை விக்னேச்வர பூஜையுடன் துவங்கி, பீட பூஜை, அனுஷ பிரதான பூஜை, சித்திர பட ஆவாஹனம், குருத்யானம், காஞ்சி மஹா பெரியவர் அஷ்டோத்திர அர்ச்சனை, தூப, தீப நைவேத்யம், மந்திர புஷ்பம், சதுர்வேத பாராயணம், கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. மேலும், வேதபாராயணம், காஞ்சி மட ஸ்வஸ்தி வசனம், தோடகாஷ்டகம், விநாயகர் அகவல், சிவபுராணம், திருத்தொண்டர் தொகை, கோளறு திருப்பதிகம், பஞ்சபுராணம், திருப்புகழ் உள்ளிட்ட பாராயணங்கள் நடைபெற்றது. உடுமலை மற்றும் சுற்றுப்புறத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை செல்வ விநாயகர் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.