காஞ்சி பெரியவர் தமிழகத்தில் தோன்றியது நாம் பெற்ற பேறு
மதுரை: "ஞானிகள் அவதரித்த இடம் நம் தமிழகம். காஞ்சி பெரியவர் இங்கு தோன்றியது நாம் பெற்ற பேறு" என பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ராமலிங்கம் மதுரையில் பேசினார்.
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மஹா ஸ்வாமிகளின் 31 ஆவது சித்தி தினத்தை ஒட்டி, மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் ஆராதனை விழா நடந்து வருகிறது. இதில்பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ராமலிங்கம் குருவே சரணம் எனும் தலைப்பில் பேசினார். அவர் பேசியதாவது:ஆன்மிகத்தில் தென்னாட்டுக்கு முக்கியத்துவம் உண்டு. ஹிந்து மதத்தை வளர்க்கும் கோயில்கள் இங்கே அதிகம். உலகம் ஒரு வீடு என்றால், இந்தியா பூஜை அறை என்றார் காஞ்சிப்பெரியவர். முனிவர், ரிஷிகள், சாதுக்கள், யோகிகள், ஞானிகள் அவதரித்த இடம் தமிழகம். காஞ்சி பெரியவர் இங்கு தோன்றியவர் என்பது, நாம் பெற்ற பேறு.கேட்டு கொடுப்பது தானம். கேட்காமல் தருவது தர்மம். இரண்டும் நம் சந்ததிகளுக்கு புண்ணியத்தை சேர்த்துக் கொடுக்கும். எனவே தானமும், தர்மமும் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார் காஞ்சி பெரியவர். மனித மனம் எளிதில் திருப்தி அடையாது. தன்னிடம் இருப்பதை விட்டு விட்டு இல்லாததை நினைத்து ஏங்கும். இன்று நம்மிடம் எதுவும் இல்லையே என நினைத்து வருந்தாதீர்கள். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றார் காஞ்சி பெரியவர். இன்றைய தலைமுறையினரின் எதிர்காலம் நன்றாக இருக்க, பெற்றோரே குருவாக இருக்க வேண்டும். அப்போதுதான், பிள்ளைகளை நெறிப்படுத்த முடியும். எல்லோருக்கும் குரு வேண்டும். குரு காட்டும் வழியில் சென்றால் நன்மைகள் நிச்சயம் கிடைக்கும். அப்படியான ஜகத்குருவாக இருப்பவர் காஞ்சி மகா பெரியவர். அவரது பாதங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டால் நம்மை துன்பங்கள் நெருங்காது என்றார். அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடு செய்தார்.