ஸ்ரீரங்கம் பகல் பத்து மூன்றாம் நாள்; சவுரிகொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி
திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து மூன்றாம் நாளான இன்று நம்பெருமாள் சவுரிகொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியாளி்ததார். பக்தர்கள் ரெங்கா ரெங்கா என பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தின் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி எனப்படும் பரமபத வாசல் திறப்பு விழா வருடம் தோறும் 21 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். முதல் நாள் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, அடுத்த பத்து நாட்கள் பகல் பத்து என்றும், அதற்கு அடுத்த பத்து நாட்கள் இராப்பத்து எனவும் உற்சவம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு வைகுண்ட ஏகாதேசி பெருவிழா கடந்த 19ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. அதற்கு அடுத்து பகல் பத்து உற்சவம் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது,
திருவாய்மொழி திருநாட்கள் எனப்படும் பகல்பத்து திருநாளின் 3-ம் நாளான இன்று காலை நம்பெருமாள் சவுரிக்கொண்டை அலங்காரத்தில் கலிங்கத்துராய், ரத்ன அபய ஹஸ்தம், ரத்தின காதுகாப்பு, முத்துச்சரம் பவள மாலை, பருத்திக்காய் காசு மாலை, அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் சூடியபடி தங்க பல்லக்கில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு உள்பிரகாரங்களில் வலம் வந்து அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். பக்தர்கள் ரெங்கா ரெங்கா என பக்தி பரவசத்துடன் வணங்கி வழிபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து அர்ஜுன மண்டபத்தில் அரையர்கள் அபிநயத்தோடு இசைத்த திவ்ய பிரபந்தத்தின் தீந்தமிழ் திரு மொழி பாசுரங்களை கேட்டவாறு பக்தர்களுக்கு சேவை சாதித்த பின்னர் நம்பெருமாள், இன்று மாலை மூலஸ்தானம் சென்று அடைகிறார். வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் உள்ளிட்ட இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.