மைசூரு அரண்மனை வளாகத்தில் ஆன்மிக ஸ்துதி சங்கர பாராயணம்
மைசூரு: மைசூரு அரண்மனை வளாகத்தில், சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் உத்தராதிகாரி ஜகத்குரு சங்கராச்சாரிய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ மஹா சுவாமிகள், ஆன்மிக ஸ்துதி சங்கர பாராயணம் நடத்தினார்.
சிக்கமகளூரு சிருங்கேரி சாரதா பீடம் உத்தராதிகாரி ஜகத்குரு சங்கராச்சாரிய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ மஹா சுவாமிகள், ஆன்மிக ஸ்துதி சங்கர பாராயணம் நிகழ்ச்சிக்காக, நேற்று மைசூரு அரண்மனைக்கு வருகை தந்தார். அவருக்கு மன்னர் குடும்பத்தின் சார்பில் பாத பூஜை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அரண்மனைக்குள், மன்னர் குடும்பத்தின் பிரமோதா தேவி, அவரது மகன் யதுவீர், அவரது மனைவி திரிஷிகா குமாரி, இரு மகன்கள் ஆகியோர் சுவாமிகளின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
இதனை தொடர்ந்து அரண்மனை வளாகத்தில் நடந்த, ஸ்துதி சங்கர பாராயணத்தை சுவாமிகள் நடத்தினார். இப்பாராயணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பாராயணம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்களில் குறிப்பாக பெண்கள் திரளாக பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை ஒட்டி, அரண்மனைக்குள்ளும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.