திருப்பதியில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்: பாரம்பரிய தூய்மை பணி
திருப்பதி; திருமலை திருப்பதியில் இன்று டிச.,23ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் நடைபெறும் பத்து நாள் வைகுண்ட துவார தரிசனத்தை முன்னிட்டு, கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆண்டுக்கு நான்கு முறை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். யுகாதி, அனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய செவ்வாய்க்கிழமைகளில் இந்தக் கோயில் தூய்மைப்படுத்த படுகிறது. அதன்படி இன்று கோயில் வளாகத்தின் சுவர்கள், கூரைகள், தூண்கள் என அனைத்து பகுதிகளிலும் பரிமளம் என்ற சிறப்பு நறுமண கலவை பூசப்பட்டு கோயில் முழுவதும், தெய்வங்கள், பூஜை பாத்திரங்கள் சுத்தம் செய்யப்பட்டன. முழு நடவடிக்கையும் காலை 6 மணி முதல் 10 மணி வரை நடந்தது. மூலவர் கருவறை பட்டு துணியால் மூடப்பட்டு, பச்சைக் கற்பூரம், கிச்சிலிக் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், திருச்சூர்ணம் உள்ளிட்ட மூலிகை கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. பின்னர், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் நைவேத்தியங்கள் செய்யப்பட்டனர். பகல் 12 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்னர். கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு, இன்று செவ்வாய்க்கிழமை அஸ்ததள பாத பத்மாராதனை, விஐபி இடைவேளையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.