மேட்டுப்பாளையத்தில் 63 நாயன்மார்கள் ஊர்வலத்திற்கு ஐம்பொன் சுவாமி சிலைகள்
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் நடைபெற உள்ள, 63 நாயன்மார்கள் சிலைகள் ஊர்வலத்திற்கு சுவாமி சிலைகள் வாங்கப்பட்டுள்ளன.
மேட்டுப்பாளையத்தில் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை செயல்படுகிறது. இந்த அறக்கட்டளை நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆன்மீகத்தை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பெரியபுராணம் தொடர் வகுப்பை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் நகரில், 63 நாயன்மார்கள் சிலைகள் மற்றும் சுவாமி சிலைகள் அடங்கிய ஊர்வலம் நடத்தி வந்தனர். இந்த ஆண்டு நாயன்மார்கள் ஊர்வலம் நடத்த, அதற்கான சுவாமி சிலைகள் உட்பட நாயன்மார்கள் சிலைகள் சொந்தமாக வாங்க, அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுகுறித்து சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியதாவது: மேட்டுப்பாளையம் நகரில், ஒவ்வொரு ஆண்டும் நாயன்மார்கள் ஊர்வலத்திற்கு, வெளியே மடங்களில் இருந்து சுவாமி சிலைகளும், நாயன்மார்கள் சிலைகளும் வாங்கப்பட்டு வந்தன. தற்போது சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் சிவனடியார்கள், பக்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் வழங்கிய நன்கொடையால் முதலில் ஐம்பொன்னால் செய்த தையல்நாயகி உடனமர் வைத்தீஸ்வரர், சோமாஸ் கந்தர், விநாயகர், வள்ளி தெய்வானை சமேதராக முருகன் ஆகிய சுவாமி சிலைகள், கிருஷ்ணகிரியில் இருந்து வாங்கப்பட்டுள்ளன. இது அல்லாமல், 63 நாயன்மார்கள் சிலைகள் செய்யும் பணிகள், கும்பகோணத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த சிலைகள் அனைத்தும் வைக்க, பழைய சந்தை கடை மைக்கன் மாரியம்மன் கோயில் அருகே, சிறிய அளவில் மடம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது இந்த சிலைகள் மேதர் பிள்ளையார் கோயிலில் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் வருகிற மார்ச் மாதம் குருநாதர் குருபூஜையுடன், கும்பாபிஷேகமும், அதை தொடர்ந்து, 63 நாயன்மார்கள் சிலைகள் ஊர்வலம், மேட்டுப்பாளையம் நகரில் நடைபெற உள்ளது. இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.