உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி பெண்கள் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றி வழிபாடு

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி பெண்கள் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றி வழிபாடு

திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ஏராளமான பெண்கள் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.


உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனக் கூறி திருப்பரங்குன்றத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக வீடுகளில் முருகன் கொடி கட்டியும், வாசலில் கோலமிட்டு தீபம் ஏற்றி வந்தனர். மலைக்கு செல்லபோலீசார் தடை விதித்து இருந்த நிலையில் டிச. 21 சந்தனக்கூடு திருவிழாவிற்காக மலையில் உள்ள கல்லத்தி மரத்தில் கொடியேற்ற முஸ்லிம்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பழநி ஆண்டவர் கோயில் தெருவை சேர்ந்த 14 பெண்கள் ,3 ஆண்களை போலீசார் கைது செய்து இரவு 9:00 மணிக்கு மேல் விடுதலை செய்தனர். இதனால் பொதுமக்கள் அன்று இரவு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பழநி ஆண்டவர் கோயில் தெரு மக்கள் தங்களது வீடுகளில் நேற்று காலை முருகன் உருவம் பொறித்த மஞ்சள் கொடிகளை கட்டி மாலை 6:30 மணிக்கு அனைத்து வீடுகளிலும் விளக்கு கோலமிட்டு அதில் அகல் விளக்குகள் ஏற்றினர். பின் கோயில் முன் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, உச்சி மலை மீது தீபம் ஏற்ற வேண்டும்" என கோலப்பொடியில் எழுதி அதில் நுாற்றுக்கும் மேற்பட்ட விளக்குகளை ஏற்றி கந்த சஷ்டி கவசம் பாடினர். சிறுவர்களும் பங்கேற்றனர். இதேபோன்று திருப்பரங்குன்றத்தில் உள்ள கீழத்தெரு, படப்பிடி தெரு, கோட்டைத் தெரு, நெல்லையப்பபுரம், திருநகர், பாண்டியன்நகர் பகுதிகளில் 2 ஆயிரத்திக்கும் மேற்பட்ட வீடுகளில் நேற்று விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !