அதிகரிக்கும் பாதயாத்திரை பக்தர்கள் எண்ணிக்கை; அடிப்படை வசதிகள் அறவே இல்லை
ஒட்டன்சத்திரம்; பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் குடிநீர், கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழநியில் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்வதற்கு ஆண்டுதோறும் காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தேனி, புதுக்கோட்டை உட்பட பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து காவடி எடுத்துக்கொண்டு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். தைப்பூசத்தன்று பக்தர்களின் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கு முன்கூட்டியே பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரையாக செல்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக தைப்பொங்கலுக்கு முன்பே பழநிக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இவ்வாறு முன்கூட்டியே பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் அடிப்படை வசதிகள் இன்றி அல்லல்படும் நிலை தொடர்ந்து நடந்து வருகிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தேவஸ்தானம் மூலம் பக்தர்களுக்கு குழந்தை வேலப்பர் கோயில், ஒட்டன்சத்திரம் பழநிக்கு இடைப்பட்ட இடங்கள், ஒட்டன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன், ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் நிழல் பந்தல்கள் அமைக்கப்படுவது வழக்கம். மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மின்விளக்குகள் அமைத்து கொடுக்கின்றனர். ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் பக்தர்களின் வசதிக்கு குளிக்கும் இடம், தற்காலிக கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். இந்த அடிப்படைத் தேவைகளை தைப்பொங்கலுக்கு முன்னர் வரும் பக்தர்களும் பயன்படுத்தும் வகையில் முன்கூட்டியே செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் வெளியே பக்தர்களின் நடைபாதையில் குப்பைகள் கொட்டி வைத்துள்ளனர். நடைபாதை பாதி இடங்களில் காணாமல் போய்விட்டது. இருக்கும் நடைபாதையிலும் குப்பைகளை கொட்டியும் நாற்காலிகளை போட்டும் ஆக்கிரமித்துள்ளனர். செடி கொடிகள் முளைத்துள்ளதால் இரவு நேரத்தில் நடப்பது சிரமமாக உள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.