பிறந்தது புத்தாண்டு 2026: உலகம் முழுவதும் மக்கள் கொண்டாட்டம்
சென்னை: 2025 ம் ஆண்டு இனிதே நிறைவடைந்து 2026 ம் ஆண்டு பிறந்ததையொட்டி, மக்கள் உலகம் முழுவதும் புதிய ஆண்டை வரவேற்று மக்கள், பொது இடங்களில் ஒன்று கூடி, ஆடல், பாடல்களுடன் உற்சாகமாக புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.
முக்கியநகரங்களான டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை ,உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்கள் ஒன்று கூடி புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்றனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர். புத்தாண்டையொட்டி, கோயில்கள் சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பசிபிக் கடலில் உள்ள கிரிபாட்டி தீவுகளிலும், அடுத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சமோவா டோங்கா தீவிலும் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
ஆங்கில புத்தாண்டு 2026ஐ வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் தயாராக உள்ளனர். சூரியன் முதலில் உதயமாகும் பசுபிக் தீவான கிரிபாட்டியில் ஆங்கிலப் புத்தாண்டு முதலில் பிறந்தது. அந்தத் தீவில் உள்ள கிறிஸ்துமஸ் நகரில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
நியூசிலாந்து: நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் புத்தாண்டு பிறந்ததும், நகரின் மையப்பகுதியில் வண்ண வாண வேடிக்கைகள் ஒளி வெள்ளம் பாய்ச்சின. நகர வீதிகளில் மக்கள் உற்சாகமாக ஆங்கிலப்புத்தாண்டை கொண்டாடினர்.
ஆஸ்திரேலியா: இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறக்க மக்கள் வாழ்த்துகளை தெரிவித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், சிட்னி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.