ஆங்கில புத்தாண்டு தினதில் திருப்பூர் மக்கள் உற்சாகம்: கோவில்களில் வழிபாடு
திருப்பூர்: ஆங்கில புத்தாண்டு (2026) பிறப்பான நேற்று, திருப்பூர் பகுதி மக்கள், கோவில்களில் வழிபாடு நடத்தியும், தியேட்டர், பூங்காக்களுக்கு சென்றும், மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.
டிச. 31ம் தேதியுடன் 2025ம் ஆண்டு, 2026 புதிய ஆண்டு நேற்று பிறந்தது. மக்கள் அனைவரும் உற்சாகமாக புதிய ஆண்டை வரவேற்றனர். தொழில் வளம் பெருக வேண்டும்; இல்லத்திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்கிற பிரார்த்தனையோடு, திருப்பூர் பகுதி பக்தர்கள், நேற்று கோவில்களில் வழிபாடு நடத்தினர். தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன், விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவ பெருமாள் கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர்கோவில், போலீஸ் லைன் மாரியம்மன், காலேஜ் ரோடு அய்யப்பன் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் நேற்று காலை முதலே, பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. காலை முதல் மதியம் வரை, குடும்பம் சகிதமாக பங்கேற்ற பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. < ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அரையாண்டு பரீட்சை முடிந்து, மாணவர்கள் வீட்டில் உள்ளனர். இதனையடுத்து, பொழுது போக்குவதற்காக பலரும், குடும்பத்தினர், உறவினர்களோடு நேற்று தியேட்டர்களுக்கு சென்றனர். திருப்பூர், பார்க் ரோட்டிலுள்ள பூங்காவிலும், வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.