உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு சந்தனம் படி களையப்பட்டு பூஜை; பக்தர்கள் பரவசம்

உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு சந்தனம் படி களையப்பட்டு பூஜை; பக்தர்கள் பரவசம்

கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி இன்று மரகத நடராஜருக்கு சந்தனம் படி களையப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


ராமநாதபுரம் மாவட்டம்  உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் மூலவர் மங்களநாத சுவாமியாகிய சிவலிங்கம் சுயம்பு ஆனவர்.  ராமநாதபுரத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கோயிலில் பச்சை மரகதக் கல்லினால் 5.5 அடி ஆளுயரத்தில், நடனம் ஆடும் திருக்கோலத்தில் அபூர்வ நடராஜர் சிலை உள்ளது. பச்சை மரகதம் ஒலி, ஒளி அதிர்வுகளைத் தாங்க முடியாத தன்மை உடையது என்பதால், ஒலி, ஒளி அதிர்வுகளிலிருந்து இச்சிலையைப் பாதுகாக்க சிலைக்குச் சந்தனப்பூச்சு கலவையைப் பூசிப் பாதுகாக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரைத் திருநாளில் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனப்பூச்சு கலையப்பட்டு, இரவே மீண்டும் சந்தனம் பூசப்படுகிறது. அதன்படி இன்று காலை  பச்சைமரகதக்கல் நடராஜருக்குச் சந்தனப்பூச்சு களைக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நடராஜப் பெருமானுக்குச் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. இன்று ஒரு நாள் பகல் முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக பச்சை மரகத மேனியுடன் நடராஜர் சுவாமி காட்சியளிக்கிறார்.


தொடர்ந்து  இரவு ஆருத்ரா தரிசனத்தையொட்டி மீண்டும் ஆருத்ரா மகா அபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் நடந்த பின்னர் நடராஜருக்கு மீண்டும் சந்தனக்கலவை பூசப்படும். பச்சை மரகதக்கல்லினால் ஆன நடராஜரை தரிசிக்க மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று விடுமுறை அளித்து கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அறிவித்தார். அதே போல் போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !