உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கையில் புதிய சந்தன காப்பு அலங்காரத்தில் பச்சை மரகத நடராஜப் பெருமான்

உத்தரகோசமங்கையில் புதிய சந்தன காப்பு அலங்காரத்தில் பச்சை மரகத நடராஜப் பெருமான்

உத்தரகோசமங்கை; ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவன் கோயிலாகும்.


ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு கடந்த டிச., 25 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற சிவஸ்தலமான உத்தரகோசமங்கையில் மங்களநாதர் சுவாமி கோயிலின் வடக்கு பகுதியில் அபூர்வ பச்சை மரகத நடராஜருக்கு தனி சன்னதி உள்ளது. அபூர்வமான இந்த சிலைக்கு ஒலி, ஒளியால் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் உயர்ரக சந்தனத்தால் காப்பிடப்பட்டு நடராஜ பெருமான் இருப்பார். மற்ற இதர நாட்களில் எல்லாம் கம்பி கதவுகளுக்கு இடையே மட்டுமே நடராஜரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள்.


ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று பழைய சந்தனம் களையப்பட்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகளுக்கு பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று இரவு 11:30 மணிக்கு பச்சை மரகத நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு 60 கிலோ எடை கொண்ட முதல் தர சந்தனம் பவுடர் சந்தனாதி தைலத்தின் மூலமாக பூசப்பட்டது. திரை விளக்கப்பட்ட பின்னர் பின்னர் மரகத நடராஜர், சிவகாமி அம்மனுக்கு மார்கழி திருவாதிரை அருணோதய காலத்தை முன்னிட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. புதிய சந்தனம் காப்பிடப்பட்ட நிகழ்வை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் ராஜகோபுரத்தின் வெளிப்பகுதியில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 10:00 மணிக்கு கூத்தர் பெருமான், மாணிக்கவாசகர் உற்ஸவ மூர்த்திகளாக எழுந்தருளி, கையிலை வாத்திய முழங்க நான்குரத வீதிகளிலும் உலா வந்தனர். பின் மாலையில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், இரவு 8:00 மணிக்கு மாணிக்கவாசகப் பெருமானுக்கு, சுவாமி காட்சி கொடுத்த பின்னர் விழா நிறைவடைந்தது. கடந்த ஜூன் 4 அன்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மரகத நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டு மீண்டும் பூசப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !