பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் கோலாகலம்
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கேரள மாநிலம் பாலக்காடு நகர் அருகே உள்ளது காடாங்கோடு பகவதி அம்மன் கோவில். இங்கு எல்லா ஆண்டும் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டு உற்சவம் நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. காலை 5:30 மணிக்கு அஷ்டதிரவிய மகா கணபதி ஹோமம், 6:30க்கு உஷ பூஜை, 7:30 மணிக்கு நவகம், பஞ்சகவ்யம், 8:30க்கு உச்ச பூஜை ஆகியவை நடந்தது. தொடர்ந்து 10:00 மணிக்கு கேரளா பாரம்பரிய கலையான சாக்கியார்கூத்து என்ற நடன நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாலை 6:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் உள்ள அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. 7:00க்கு அத்தாழ பூஜை நடந்தது. முன்னதாக மாலை 5:00 மணிக்கு பஞ்சவாத்தியம், குடை வாத்தியம், நாதஸ்வரம், பூக்காவடியுடன் மேள தாளங்கள் முழங்க, அம்மன் யானை மீது எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.