மாசாணியம்மன் குண்டம் திருவிழா; 91 அடி உயர கொடி மரம் தயார்
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவுக்கு, 91 அடி உயரம் உள்ள கொடி மரம், கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்கு, அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
இக்கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் கோவை, மதுரை, திருப்பூர் உட்பட பல்வேறு நகரங்களிலிருந்தும் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொள்வர். நடப்பாண்டு குண்டம் திருவிழா நாளை காலை, 7:30 மணிக்கு மேல், 8:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்காக, சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து கொடிமரம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. மாசாணியம்மன் கோவில் நற்பணி மன்ற தலைவர் சாந்தலிங்ககுமார் தலைமையில், கோவில் முறைதாரர் மனோகர், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பக்தர்கள் வனப்பகுதிக்கு சென்று, 91 அடி மூங்கில் மரம் எடுக்கப்பட்டது. சர்க்கார்பதி மாரியம்மன் கோவிலில் கொடி மரத்துக்கு மஞ்சள், குங்குமம் பூசப்பட்டு, புடவை சுற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் கொடி மரத்தை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு, ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். வரும், 31ம் தேதி இரவு, 12:30 மணிக்கு மயான பூஜையும், வரும், 3ம் தேதி காலை, 7:30 மணிக்கு மேல், 8:30மணிக்குள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.