உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கோவிலில் புரோக்கர்கள் ஆதிக்கம் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா?

திருவண்ணாமலை கோவிலில் புரோக்கர்கள் ஆதிக்கம் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா?

திருவண்ணாமலை: ‘திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரோக்கர்கள் ஆதிக்கத்தை தடுத்து, பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில், வார விடுமுறை நாட்களில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது. பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அ.தி.மு.க., ஆட்சி காலங்களில், கிழக்கு கோபுரமான ராஜகோபுரம் மற்றும் வடக்கு அம்மணி கோபுரம் வழியாக பக்தர்கள் எளிதாக சென்று, மேற்கு கோபுரம் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், கோவில் வளாகம், 27 ஏக்கர் பரப்பளவு என்பதாலும், எவ்வளவு பக்தர்கள் வந்தாலும் எளிதாக கோவிலினுள் சென்று வெளியே வர ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று, நான்கு ஆண்டுகளுக்கு முன் அறங்காவலர் குழுவினர் நியமிக்கப்பட்டனர். அதே நேரத்தில், ஆந்திரா, தெலுங்கான மாநிலத்தை சேர்ந்தவர்களின் குல தெய்வம் அருணாசலேஸ்வரர் தான் என, அம்மாநிலங்களை சேர்ந்த ஆன்மிகவாதிகள் தெரிவித்ததால், அம்மாநில மக்களின் வருகையும் பல மடங்கு அதிகரித்தது. இதை சாதகமாக பயன்படுத்தி, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களை, மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வைத்து தரிசனத்திற்கு அனுமதிக்கின்றனர்.


இலவச தரிசனம் சாதாரண நாட்களில், 3 மணி நேரமும், வார விடுமுறை, விழா காலங்களில், 7 முதல், 8 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், ஆன்மிக சுற்றுலா வரும் பக்தர்கள், குறிப்பிட்ட நேரத்தில் சுவாமி தரிசனம் செய்து, அடுத்த கோவிலுக்கு செல்ல முடியாமல் ஒரு நாள் முழுதும் திருவண்ணாமலையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி, புரோக்கர்கள் சிலர், ஒரு நபருக்கு, 1,000 முதல், 2,000 ரூபாய் வரை வசூலித்து, கோவிலில் உள்ள முக்கிய ஊழியர்களின் துணையோடு அரை மணி நேரத்தில் தரிசனம் செய்து அனுப்பி வைக்கின்றனர். இதனால், பண வசதி இல்லாத பக்தர்கள், உள்ளூர் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோவிலில் தினமும் ஆறு கால அபிஷேகம் நடத்தப்படும் நிலையில், ஒரு கால அபிஷேகத்திற்கு, ஆறு குழுவினர் தலா, 5 பேர் வீதம், 30 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். இதில், ஒரு குழுவினர் கோவிலுக்கு அபிஷேக கட்டணம், 2,500 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். ஆனால், 4,000 ரூபாய்க்கு மேல் கோவில் ஊழியர்களால் வசூலிக்கப்பட்டு, கோவிலுக்கு, 2,500 ரூபாய்க்கு மட்டும் ரசீது போடப்படுகிறது. இவ்வாறு தினசரி பல ஆயிரம் ரூபாய் பக்தர்களிடம் மோசடியாக வசூலிக்கப்படுகிறது. மேலும் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கும், புரோக்கர்கள் குறுக்கு வழியில் உள்ளே அழைத்து செல்லும் பக்தர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. புரோக்கர்கள் ஆதிக்கத்தை தடுத்து, பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய அறநிலையத்துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !