சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் நிறைவு : இன்று நடை அடைப்பு
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக்கப்படுகிறது.
சபரிமலையில் மண்டல கால பூஜைக்காக கடந்த நவ., 16 மாலை நடை திறக்கப்பட்டு, டிச., 27 இரவு அடைக்கப்பட்டது. மூன்று நாள் இடைவெளிக்கு பின்னர் டிச.,30 மாலை நடைதிறந்து மகர விளக்கு கால சீசன் தொடங்கியது. ஜன., 14-ல் மகரஜோதி விழா நடைபெற்றது. கடந்த 18-ல் நெய் அபிஷேகம் நிறைவு பெற்றது. நேற்று மாளிகைப்புறம் மணிமண்டபம் முன்பு குருதி பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 10.00 மணிக்கு பக்தர்களின் தரிசனம் நிறைவு பெற்றது. மகரஜோதிக்கு பின்னரும் சபரிமலையில் தொடர்ந்து கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது. இன்று அதிகாலை 5.00 மணிக்கு நடை திறந்து கணபதி ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு பின்னர் காலை 7:00 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக்கப்படுகிறது. அதன் பின்னர் மாசி மாத பூஜை களுக்காக பிப்., 12-ம் தேதி மாலை 5.00 மணிக்கு மீண்டும் நடை திறக்கும்.