உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமாவாசை நாளில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் போலி புரோகிதர்கள்

அமாவாசை நாளில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் போலி புரோகிதர்கள்

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.


தை, மாசி, ஆடி, புரட்டாசி அமாவாசை அன்று தமிழக பக்தர்கள் ஏராளமானோர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்களிடம் திதி, தர்ப்பணம் பூஜை செய்து புனித நீராடுவார்கள். அமாவாசை நாளில் பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி வெளியூர் சேர்ந்த போலி புரோகிதர்கள் சிலர், அக்னி தீர்த்த கடற்கரையில் முகாமிட்டு பொய்யாக பூஜை செய்து பக்தர்களை ஏமாற்றி பணம் வசூலிப்பதாக புகார் எழந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தை அமாவாசை யொட்டி போலி புரோகிதர்கள் சிலர் அக்னி தீர்த்த கடற்கரையில் அமர்ந்து பக்தர்களை ஏமாற்றி பொய்யாக மந்திரம் சொல்லி ரூ. 500 முதல் ரூ. 2000 வரை வசூலித்து உள்ளனர். இந்த போலி புரோகிதர்களின் பொய்யான மந்திரம் உச்சரிப்பு குறித்து நேற்று சமூக வலைவளத்தில் பரவி வைரலாகியது. இது பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதுகுறித்து அக்னி தீர்த்த கரை புரோகிதர்கள் நலச்சங்கம் செயலாளர் பி.சுந்தரேசன் கூறுகையில்; போலி புரோகிதர்களை தடுக்க ஜன., 17 இரவி அக்னி தீர்த்த கடற்கரையில் கண்காணிப்பில் ஈடுபட்டோம். ஆனால் சில போலி ஆசாமிகள் அன்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் கடற்கரைக்கு வந்து பக்தர்களை ஏமாற்றி பூஜை செய்துள்ளனர். இதனை கூட்ட நெரிசலால் தடுக்க முடியவில்லை. கோயில் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் இந்த போலி புரோகிதர்களை எதிர்காலத்தில் ஊடுருவாமல் தடுக்க முக்கிய அமாவாசை நாளில் இரவு முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட்டு போலீசார் மூலம் போலி புரோகிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !