உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 62 நாள் மண்டல, மகரவிளக்கு சீசன் நிறைவு : சபரிமலை நடை அடைப்பு

62 நாள் மண்டல, மகரவிளக்கு சீசன் நிறைவு : சபரிமலை நடை அடைப்பு

சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை அடைக்கப்பட்டது. பிப்., 12 மாசி மாத பூஜைக்காக நடை திறக்கப்படும்.கடந்தாண்டு நவ., 16 துவங்கிய மண்டல சீசனும், டிச., 30- துவங்கிய மகர விளக்கு சீசனும் நேற்று காலை நிறைவு பெற்றது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் கிழக்கு மண்டபத்தில் கணபதி ஹோமம் நடந்தது. பின் குருசாமி சிவன் குட்டி தலைமையில் 30 பேர் குழுவினர் திருவாபரண பேடகங்களை சுமந்து பந்தளத்துக்கு புறப்பட்டனர்.


தொடர்ந்து மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி ஐயப்பன் விக்ரகத்தில் திருநீறு அபிஷேகம் நடத்தி கழுத்தில் ருத்ராட்ச மாலையும் கையில் யோக தண்டம் கொடுத்து ஐயப்பனை தியான நிலையில் அமர்த்திய பின் காலை 6:45 மணிக்கு நடையை அடைத்து சாவியை பந்தளம் மன்னர் பிரதிநிதியிடம் ஒப்படைத்தார்.தொடர்ந்து பந்தளம் மன்னர் பிரதிநிதி நாராயணவர்மா 18 படிகள் வழியாக கீழே வந்ததும் சபரிமலை நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாசனிடம் கோயில் சாவியையும், வரும் மாதங்களில் பூஜை நடத்துவதற்காக பண முடிப்பையும் கொடுத்து விடை பெற்றார். இந்நிகழ்வுடன் சபரிமலையில் மீண்டும் ஒரு மண்டல, மகர விளக்கு காலம் நிறைவு பெற்றது. இனி மாசி மாத பூஜைகளுக்காக பிப்., 12- மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !