பழநி தைப்பூசத்தை முன்னிட்டு தரிசன கட்டணம் இல்லை: ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு
பழநி; பழநி முருகன் கோயிலில் ஜன.26 முதல் பத்து நாட்களுக்கு தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு குறித்த அரசு துறைகளின் ஆலோசனைக் கூட்டம் ஆர்.டி.ஒ., தலைமையில் நடைபெற்றது.
பழநி முருகன் கோயிலில் பிப்.,1ல் தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ளது. தைப்பூச திருவிழா ஜன.,26,ல் துவங்கி பத்து நாட்கள் நடைபெறும். இந்நிலையில் பாதயாத்திரை ஆக தைப்பூசத்திற்கு பழநி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்ய அரசு துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஓ., அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஆர்.டி.ஓ., கண்ணன் தலைமை வகித்தார். கோயில் துணை கமிஷனர் வெங்கடேஷ், டி.எஸ்.பி., தனஞ்செயன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பாதயாத்திரை பக்தர்கள் குறித்து துறை அலுவலர்களிடம் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் தைப்பூச தினத்தை முன்னிட்டு ஜன.31,பிப்.1,2.,ஆகிய மூன்று நாட்களுக்கு தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டு அனைத்து வழிகளிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். கட்டணம் குறித்த அறிவிப்பு பலகைகளை அகற்றப்பட வேண்டும். பாதயாத்திரை பக்தர்களுக்கான சாலைகளை சரி செய்து தர வேண்டும். கோயில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் பகுதிகளில் விளக்குகள் அமைக்கப்பட வேண்டும். பார்க்கிங் வசதிகள், பஸ் ஸ்டாண்ட் மாற்றம், பக்தர்கள் தரிசனம் செய்யும் பாதை, பாதயாத்திரை பக்தர்களின் பாதுகாப்பு, அன்னதானம் வழங்கும் பக்தர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.