நமச்சிவாயம் என்பதை ஞானமும், கல்வியும் பேரூர் ஆதீனம் அருளாசி!
பல்லடம்; நமச்சிவாயம் என்பதே ஞானமும், கல்வியும் ஆகும் என, பல்லடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரூர் ஆதீனம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
பல்லடம் சிவாலய சிவனடியார் திருக்கூட்டத்தின் சார்பில், 108 சிவலிங்க பூஜை, கோ பூஜை மற்றும் அஸ்வ பூஜை ஆகியவை, வனாலயம், அடிகளார் அரங்கில் நடந்தது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசியதாவது : அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்ற பழமொழி உள்ளது. அவ்வாறு, மானிடராய் பிறந்து விட்டால், படிப்பு மட்டுமின்றி, ஞானமும் அவசியம். இறை வழிபாட்டால்தான் அந்த ஞானம் நமக்கு கிடைக்கும். இறைவனை வழிபடும் நேரத்தை பயன்படுத்தாவிட்டால், அந்த நேரத்தில், வேறு ஏதாவது தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு இருப்போம். பக்தர்கள் விரும்பும் இடத்துக்கெல்லாம் இறைவன் வருவார். தண்ணீர் ஊற்றி பூஜித்து, பூக்களால் அர்ச்சித்தாலே இறைவன் மகிழ்ச்சி அடைவார். பூஜையின் மூலம், இறைவனின் நாமத்தை சொல்லும் வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது. நமச்சிவாயம் என்பதே ஞானமும், கல்வியும் ஆகும். இறைவனின் நாமத்தைச் சொல்லும் போது வீட்டில் தீய சக்திகள் அகன்று தெய்வீக சக்தி நிலைக்கும். இதனால், அன்பு, அமைதி, கல்வி, செல்வம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும். இறைவனுடைய நாமம் எல்லா இடங்களிலும் பரவ வேண்டும் என்பதற்காகவே இது போன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் பேசுகையில், இறைவனுடைய நாமத்தைச் சொல்லும் போது தீட்சை பெற்றதைப் போன்று மந்திரத்தின் பயனை பெறுகிறோம். கிடைத்ததற்கு அரிய இந்த பிறவியில், இறைவனுடைய நாமத்தை சொல்லும் பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது. இதுதான் நமது முன்னோர்கள் நமக்கு கொடுத்து சென்ற பெரும் சொத்து. பொருளைத் தேடுவதல்ல உண்மையான சொத்து. எத்தனையோ கோவில்கள் இருந்தாலும், பாடல் பெற்ற தலங்கள் மிகவும் சிறப்பு மிக்கவை. இயற்கையோடு இணைந்த வழிபாட்டு முறைகளை தான் நம் முன்னோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளனர். அவ்வாறு, சிவலிங்க திருமேனிக்கு பூஜை செய்யும் வாய்ப்பு நமக்கும் இங்கு கிடைத்துள்ளது என்றார்.