சங்கரமடத்திற்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜயம்
விழுப்புரம்: காஞ்சிபுரம் செல்லும் வழியில் விழுப்புரம் சங்கரமடத்திற்கு வந்த காஞ்சி காமகோடி 70வது பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொதுமக்களுக்கு அருளாசி வழங்கினார்.
ராஜமன்னார்குடி, கும்பகோணம், நாமக்கல் அடுத்த மோகனுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் கும்பாபிஷேகம், ஆன்மிக நிகழ்ச்சிகளில் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார்.
இவர், காஞ்சிபுரம் செல்லும் வழியில், நேற்று விழுப்புரம் சங்கரமடத்திற்கு வந்தார்.
விழுப்புரம் சங்கரமடத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், ஜாதக பரிவார்த்தனை, மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் வேத பாடசாலைகளில் பிள்ளைகளை வேதம் படிக்க வைத்த பெற்றோர்களை கவுரவிக்கும் முப்பெரும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை தாங்கி, வேதம் பயின்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கி பேசுகையில், ‘சங்கர மடத்தில் மாணவர்களுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும், மகளிருக்கும் வாழ்வில் மேம்பட பல நல்ல திட்டங்கள் உள்ளன.
இங்கு, பிராமணர் சமூகத்தினர் அனைவரும் பண்டிகை கால பூஜை, ஸ்லோகம், மந்திரங்களை கண்டிப்பாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் நல்ல கல்வியை பெற வேண்டும். நமது வைதீக கலாசாரங்களை பின்பற்ற வேண்டும்’ என்றார்.
முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு வந்து அருளாசி வழங்கினார்.
ஏற்பாடுகளை, மாவட்ட தலைவர் குமார், மாநில செயலாளர் குமார், நிர்வாகிகள் தண்டபாணி, சிவதியாகராஜன், சீனுவாசன் செய்திருந்தனர்.