அவிநாசி வரதராஜ பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா
அவிநாசி; காசிகவுண்டன் புதூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அவிநாசி வட்டம்,வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசிகவுண்டன் புதூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் அவிநாசியில் லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து 108 தீர்த்த குடம் மற்றும் முளைப்பாளிகை எடுத்து ஊர்வலமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் சென்றனர். அதனைத்தொடர்ந்து, விமான கலசம் புதிய விக்கிரகங்களுக்கு திருமஞ்சனம், கலச பிரதிஷ்டை மற்றும் ஸ்ரீ விஷ்வக் ஷேன பூஜை, பஞ்சகவ்யம்,துவார பூஜை ஆகியவற்றுடன் முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று சுப்ரபாதம், திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி,சர்வ காயத்ரி ஹோமம் ஆகியவற்றுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்று விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காசிகவுண்டன்புதூர் ஊர் மக்கள் மற்றும் கோவில் விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.