உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

திருவொற்றியூர்: தட்சிணாமூர்த்தி கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.


திருவொற்றியூர், தேரடி – சன்னதி தெருவில் உள்ள தட்சிணாமூர்த்தி கோவில், பிரசித்தி பெற்றது. வழக்கமாக, தெற்கு முகம் நோக்கி எழுந்தருளியிருக்கும் தட்சிணாமூர்த்தி, இங்கு வடக்கு முகம் நோக்கி எழுந்தருளியிருப்பதால், வடகுருஸ்தலம் என்பர். பரிகார ஸ்தலமான இக்கோவிலின் புனரமைப்பு பணிகள் முடிந்து, நேற்று, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதை முன்னிட்டு, 4ம் தேதி கணபதி ஹோமத்துடன், யாக சாலை பூஜைகள் துவங்கின. நேற்று காலை, மஹா பூர்ணாஹூதி முடிவுற்று கடம் புறப்பாடாகின. மங்கல வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பின், 10 அடி உயரத்தில், பிரமாண்டமாக எழுந்தருளியுள்ள யோக தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில், திருவொற்றியூர் தி.மு.க., – எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் தனியரசு உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை: திருவொற்றியூர், அஜாக்ஸ் தெரு, பொன்னியம்மன் கோவில் புனரமைப்பு பணிகள் முடிவுற்று, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி, 6ம் தேதி முதல் யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை, பூர்ணாஹூதி முடிவுற்று, கடம் புறப்பாடாகின. மங்கல வாத்தியம் முழங்க விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, ‘ஓம் சக்தி... பராசக்தி’ என, விண்ணதிர முழங்கியபடி சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !