உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆல்கொண்டமால் கோவில் ஏலத்தில்

ஆல்கொண்டமால் கோவில் ஏலத்தில்

உடுமலை: உடுமலை அருகே பிரசித்த பெற்ற ஆல்கொண்டமால் கோவில், திருவிழா ஏலத்தில் "சிண்டிகேட் அமைத்து வருவாய் இழப்பு ஏற்படுத்தப்படாமல் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் இக் கோவிலில் நடக்கும் பொங்கல் திருவிழாவில் பங்கேற்பர். பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள இந்து அறநிலையத்துறை சார்பில், ஆண்டுதோறும் பொங்கல் திருவிழாவிற்கு முதல்வாரம் பொது ஏலம் விடப்படுகிறது. கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் அமைத்தல், கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் இதர வசதிகளை ஏற்படுத்த இந்த ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் வழக்கமாக ஆளுங்கட்சியினர் ஆதிக்கமே அதிகளவு இருக்கும். கடந்த தி.மு.க., ஆட்சிக்காலத்தில், அதிகபட்சமாக ஒரு லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் வரை ஏலம் விடப்பட்டது. இந்த தொகை கடந்தாண்டு அ.தி.மு.க., வினரிடையே ஏற்பட்ட போட்டி காரணமாக 4 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது. ஏலத்தொகை பல மடங்கு உயர்ந்ததால், பல்வேறு விதிமுறை மீறல்கள் கடந்தாண்டு அதிகரித்து பக்தர்கள் அவதிக்குள்ளாயினர்.

இந்தாண்டு இந்து அறநிலையத்துறை சார்பில், ஏலம் கடந்த 5ம் தேதி விடப்பட்டது. கடந்தாண்டு ஏலத்தொகையான 4 லட்சத்து 66 ஆயிரத்திலிருந்து அதிக தொகைக்கு ஏலம் கூறலாம் என இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஏலத்தில் பங்கேற்க வந்த ஆளுங்கட்சியினர் மற்றும் இதர கட்சியினர் ஏலத்தொகை நிர்ணயம் அதிகளவு உள்ளதாக தெரிவித்து 2 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கோரினர். இதனால், ஏலம் ஒத்திவைக்கப்பட்டு, இன்று (9 ம் தேதி) மீண்டும் ஏலம் விடப்பட உள்ளது. இந்நிலையில், ஏலத்தில் "சிண்டிகேட் அமைத்து குறைந்த தொகைக்கு ஏலம் எடுக்க பல கட்ட பேச்சுவார்த்தைகள் குடிமங்கலம் ஒன்றிய ஆளும்கட்சியினர் மற்றும் இதர கட்சியினரிடையே நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட ஏலத்தொகையை யாரும் எடுக்காமல், தொடர்ந்து ஏலத்தை தள்ளி வைப்பதன் மூலம் குறைந்த தொகைக்கு ஏலம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து இந்து அமைப்புகள் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. மனுவில், "ஆல்கொண்டமால் கோவில் திருவிழா ஏலத்தில் சிண்டிகேட் அமைத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே அரசு உரிய கண்காணிப்பு நடத்தி ஏலத்தை முறையாக நடத்த வேண்டும். மேலும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும், இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆல்கொண்டமால் கோவில் ஏலம் ஆளுங்கட்சியினர் ஆதிக்கத்திலேயே இதுவரை இருந்துள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏலத்திலிருந்து ஒதுங்கி கொள்ள முறையாக ஏலம் விடப்படுமா என்ற சஸ்பென்ஸ் அப்பகுதி மக்களிடமும் பரவியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !