உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளத்து நீரை காலி செய்ததால் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட கெஞ்சராய சுவாமி

குளத்து நீரை காலி செய்ததால் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட கெஞ்சராய சுவாமி

சிக்கமகளூரு தாலுகா சக்கராயப்பட்டணா கிராமத்தில், பிரசித்தி பெற்ற ரங்கநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து, 4 கி.மீ., துாரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கெஞ்சராய சுவாமி கோவில் உள்ளது. இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில், கெஞ்சராய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சுவாமி ஏன் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு உள்ளார் என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.



கோவிலுக்கு அருகே அய்யனகெரே குளம் உள்ளது. இந்த குளத்தின் தண்ணீர் மூலம், ரங்கநாத சுவாமிக்கு தினமும் அபிஷேகம் செய்யப்பட்டு உள்ளது. ஒரு கோடை காலத்தில் குளத்தில் தண்ணீர் வற்றி உள்ளது. குறைந்த தண்ணீர் மட்டுமே இருந்த நிலையில், அனைத்து தண்ணீரையும் கெஞ்சராய சுவாமி குடித்து உள்ளார். இதனால், ரங்கநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. கோபம் அடைந்த ரங்கநாத சுவாமி, கெஞ்சராய சுவாமியை இரும்பு சங்கிலியால் கட்டி போட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.


சக்தி வாய்ந்த கடவுளாக போற்றப்படும் கெஞ்சராய சுவாமியை தரிசிக்க, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆடு, கோழிகளை பலி கொடுத்து, சுவாமிக்கு நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். கோவில் முன் உள்ள துாணில் வட்ட வடிவில் கல் உள்ளது.


அந்த கல்லை சுற்ற முற்படும் போது, பக்தர்கள் மனதில் நினைப்பது நடக்கும் என்றால், கல் சுற்றும். இல்லாவிட்டால் சுற்றாது.


மிகவும் சிறிய கோவிலாக இருந்தாலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிக்கமகளூரு ஹாசன் மாவட்டங்களை சேர்ந்த, பக்தர்கள் இங்கு அதிகளவில் வருகை தருகின்றனர். கோவில் நடை தினமும் காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை திறந்து இருக்கும்.


எப்படி போகலாம்?


* பெங்களூரில் இருந்து சக்கராயப்பட்டணா 245 கி.மீ., துாரத்தில் உள்ளது.


* மெஜஸ்டிக்கில் இருந்து சிக்கமகளூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் செல்கிறது.


* சிக்கமகளூரில் இருந்து சக்கராயப்பட்டணாவுக்கு 18 கி.மீ., துாரம்.


* சிக்கமகளூரில் இருந்து வாடகை கார், ஆட்டோவில் கோவிலுக்கு செல்லலாம்.


* கோவில் அருகே உள்ள அய்யனகெரே குளம் சுற்றுலா தலமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !