உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் 21ல் மாசி பிரம்மோத்சவ கொடியேற்றம்

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் 21ல் மாசி பிரம்மோத்சவ கொடியேற்றம்

திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ பெருவிழா, வரும் 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.


செங்கல்பட்டு மாவட்டத்தில் கோவில் நகரங்களில் ஒன்றாக திருப்போரூர் விளங்குகிறது. இங்கு அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் நித்ய நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மற்றும் ஹிந்து பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இது தவிர கந்த சஷ்டி, மாசி பிரம்மோத்சவம், மாணிக்கவாசகர் உத்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன. அந்த வகையில், 2026ம் ஆண்டு மாசி பிரம்மோத்சவ பெருவிழா, வரும் 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பிரதான விழாவான தேர் திருவிழா, 27ம் தேதி காலை துவங்கி நடக்கிறது. 28ம் தேதி இரவு ஆலத்துார் கிராமத்திற்கு கந்தசுவாமி பரிவேட்டை செல்கிறார். மார்ச் 2ம் தேதி இரவு தெப்ப உத்சவம் நடைபெறுகிறது. 5ம் தேதி காலை திருக்கல்யாண வைபவத்துடன், பெருவிழா நிறைவடைகிறது. விழாவை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றிவேல் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !