சனி மகா பிரதோஷம்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் 108 கலசாபிஷேகம்
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சனி மகாபிரதோஷத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிவாச்சார்யர்களால் 108 கலசாபிஷேகம் நடைபெற்றது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பிரதோஷ நாட்களில் மாலையில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இன்று சனிமகா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி மண்டபத்தில் காலை 10:30 மணிக்கு 108 கலசங்கள் நிறுவி யாகசாலை பூஜைகள் பாஸ்கர்குருக்கள், கண்ணப்ப குருக்கள், ஹரி குருக்கள் உள்ளிட்ட சிவாச்சர்யர்களால் துவங்கியது. தொடர்ந்து மதியம் 12:30 மணிக்கு முதற்காலயாக பூஜை நிறைவடைந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.
பின்னர் மாலை 4:30 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜைகள் துவங்கியது. பூஜைகள் நிறைவாகி பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பின்னர் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி, நந்திதேவருக்கும், சுவாமிக்கும் அபிஷேக,ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து வெள்ளி ரிஷபவாகனத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினார். நந்திதேவருக்கும் அலங்காரம் நடந்து தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி உட் பிரகாரங்களில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.