திருவெண்ணெய்நல்லுார் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா நடந்தது.
அதனையொட்டி நேற்று இரவு 7:00 மணிக்கு முதல் கால பூஜை, 10:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு 1.00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, நேற்று அதிகாலை 4.00 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது. விழாவில் ஒவ்வொரு கால பூஜைகளிலும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. விழாவில் திருவெண்ணெய்நல்லுார் சாய் நட்சத்திர நாட்டியாலயா குழு சார்பில் சிறுமிகள் நாடகம் மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் சென்னை, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இதேபோல திருமுண்டீச்சரம் கிராமத்தில் உள்ள சிவலோகநாதர் கோவில், தென்மங்கலம் கிராமத்தில் உள்ள சீதபட்டீஸ்வரர் கோவில் டி.எடையார் கிராமத்தில் உள்ள மருதீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.