பம்பை ஒலி அதிர நடந்த மயான கொள்ளை; திருக்கல்யாண உற்சவ விழா
திருப்பூர்: முத்தணம்பாளையம் ஸ்ரீஅங்காளம்மன் கோவிலில், நேற்று முன்தினம் காப்புகட்டுதல், நந்தீஸ்வரர் அழைத்தல் நிகழ்ச்சியுடன் திருக்கல்யாண உற்சவ விழா துவங்கியது.
வெற்றிலை பாக்கு பிடிக்கும் நிகழ்ச்சியில், திருக்கல்யாணத்துக்கு மொய் வைக்கும் சம்பிரதாயமும் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தேவேந்திர பூஜை தங்க கவச அலங்காரமும் நடந்தது. அருளாளர்கள், அம்மனுக்கு முகம் எடுத்து ஆடியபடி மயானத்தை நோக்கி சென்றனர். மயானத்தில், வல்லாள கண்டன் சம்ஹாரம் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மயான கொள்ளை நிகழ்ச்சியும் நடந்தது. அருளாடிய பூசாரிகள், மயானத்தில் இருந்து மண்டை ஓடு, எலும்பு எடுத்து வந்து, மயானபூஜை செய்தனர். பம்பை ஒலி அதிர, பூசாரிகள் அருளாடியபடி பூஜைகள் செய்தது பிரமிப்பாக இருந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, சக்தி விந்தை அழைப்பு எனப்படும் அலகு தரிசனம் நடந்தது. அம்மன் முன்பு, சூலாயுதம் சில வினாடிகள் எலுமிச்சை மீது நிலை நின்றது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவமும், யானை வாகனத்தில் பவனியும் நடைபெற்றது. அமாவாசையான இன்று, பாகை விளையாட்டுடன் அம்மன் வரலாறு பாடும் நிகழ்ச்சி; அம்மன் திருவீதியுலா, 19ம் தேதி மாவிளக்கு, பரிவேட்டை, 20ம் தேதி மஞ்சள்நீர் பூஜைகளும் நடக்கின்றன.