உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக உற்சவ கொடியேற்றம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக உற்சவ கொடியேற்றம்

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.


விருத்தாசலத்தில் 2,500 ஆண்டுகள் பழமையான விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம், நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளின் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 12:00 மணியளவில், விருத்தகிரீஸ்வரர் சுவாமியின் பிரதான கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசையுடன் 12:27 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, அம்பாள், சண்முக சுப்ரமணியர், நந்தி மண்டப கொடி மரங்களில் கொடியேற்றம் நடந்தது. தினசரி காலை 8:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் பல்லக்கிலும், இரவு சிறப்பு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, 26ம் தேதி விபசித்து முனிவருக்கு சுவாமி காட்சி தரும் ஐதீக நிகழ்வும், மார்ச் 1ம் தேதி பஞ்சமூர்த்திகள் தேரோட்டம், 2ம் தேதி மாசி மகம் தீர்த்தவாரி, 3ம் தேதி தெப்பல் உற்சவம், 4ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பழனியம்மாள், ஆய்வாளர் பிரேமா உள்ளிட்டோர் செய்திருந்தனர். முன்னதாக, அர்த்தஜாம அடியார்கள் கூட்டம் சார்பில் கோவிலில் உழவாரப் பணி நடந்தது. மாசிமக திருவிழா துவங்கிய நிலையில், பிரதான கிழக்கு கோபுர வாசலில் வாகனங்களால் இடையூறு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !