திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமர்ச்சையாக நடந்து வருகிறது. மொத்தம், 12 நாட்கள் நடக்கும் விழாவில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், தினமும் காலை, இரவு நேரத்தில் ஒவ்வொரு வாகனத்தில் மாடவீதியில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்த வகையில்,நடப்பாண்டிற்கான மாசி மாத பிரம்மோற்சவ விழா நேற்று இரவு விநாயகர் திருவீதியுலாவுடன் துவங்கியது. இன்று காலை,8:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் இந்திர வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, மாடவீதியில் ஒரு முறை வலம் வந்தார். தொடர்ந்து, காலை, 8:15 மணிக்கு உற்சவர் கொடி மரத்தின் எதிரே உற்சவர் முருகப்பெருமான் வந்தார். சிறப்பு தீபாராதனை முடிந்ததும், கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் துணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, மோகனன், நாகன், கண்காணிப்பாளர் சித்ராதேவி மற்றும் ஊழியர்கள் உள்பட பக்தர்கள் கலந்துக் கொண்டனர். வரும், 27ம் தேதி மரத்தேர் திருவிழா, 28ம் தேதி வள்ளி திருமணம் நடக்கிறது. தொடர்ந்து, மார்ச், 2ம் தேதி கொடி இறக்கம், தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.