உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீஊருடையம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்: ஓங்கி ஒலித்த ‘ஓம் சக்தி பராசக்தி’ கோஷம்

ஸ்ரீஊருடையம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்: ஓங்கி ஒலித்த ‘ஓம் சக்தி பராசக்தி’ கோஷம்

திருப்பூர்: 15 வேலம்பாளையத்தில் உள்ள, ஸ்ரீ ஊருடையம்மன் கோவில் பிரசித்தி பெற்றது; திருப்பணிகள் நிறைவுற்று, மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நேற்று நடந்தது.


முகூர்த்தக்கால் பூஜை, ஜன., 28ம் தேதி நடந்தது; அரசமர விநாயகருக்கு பாலாலய பூஜைகள் நடந்தன. பிப்., 4ல் முளைப்பாரி போடும் நிகழ்ச்சி நடந்தது.


கடந்த, 20ம் தேதி விநாயகர் வழிபாடு, புண்யாஹவாசனம், கோபூஜை, கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக கலசபூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கோபுரம் கலசம் வைத்து, அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது.


மூன்று கால வேள்வி பூஜைகள், திருமுறை விண்ணப்பம் மற்றும் வேத ஆகம மந்திரங்களுடன் நடந்தன.


நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, நான்காம் கால வேள்வி பூஜைகள் நடந்தன; மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, நாடி சந்தானம், மங்கள திரவியாகுதி, பூர்ணாகுதியுடன் வேள்வி பூஜைகள் நிறைவு பெற்றன.


காலை, 8:30 முதல், 9:30 மணிக்குள், கன்னிமூல கணபதி , ஸ்ரீஊருடையம்மன் கோபுரம் மற்றும் மூலாலய கும்பாபிஷேகம் நடந்தது.


அவிநாசி 2வது ஸ்தானீகம் குமார சுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர், வேத சிவாகம முறைப்படி கும்பாபிஷேகம் நடத்தினர்.


சிவாச்சாரியார்கள், புனித தீர்த்தங்களை விமான கலசம் மற்றும் மூலவர் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.


‘ஓம் சக்தி பராசக்தி ’ என்ற கோஷமிட்டபடி, பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர். மகா அபிஷேகம், தசதரிசனம், தசதானம், சிறப்பு அலங்கார பூஜை, உபசார வழிபாடு, மகாதீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


அன்னதானம், காலை முதல் மாலை வரை நடந்தது. இன்று முதல், மண்டல பூஜை துவங்குகிறது.கும்பாபிஷேக ஏற்பாடுகளை, உபயதாரர்கள், 15 வேலம்பாளையம் ஊர்பொதுமக்கள்செய்திருந்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !