ஒன்னதலை மாரியம்மன் கோவில் திருவிழா
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக நடந்தது.
காலை, 6:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக வழிபாடு நடந்தது. தொடர்ந்து, காலை, 11:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட அம்மன் கிராம முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மாலை, 4:30 மணிக்கு, திருவீதி உலா கோவிலை அடைந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, முடிக்காணிக்கை நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
திருவீதி உலாவில், பஜனை, ஆன்மிக சொற்பொழிவுடன், அம்மனுக்கே உரித்தான அரக்கோல் ஆட்டம் நடந்தது.
தொடர்ந்து. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், ஒன்னதலை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று, காணிக்கை செலுத்தி அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.