திருக்காஞ்சி சிவ சித்தர்வனம் மகா கும்பாபிஷேகம்
வில்லியனுார்: திருக்காஞ்சி சிவ சித்தர்வனம் மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது.
வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கங்கா காசி சித்தர் நேச ருத்ர பஞ்ச மூர்த்தி ஆதீஸ்வரர் சிவ சித்தர்வனத்திற்கு நேற்று முன்தினம் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதற்கான பூர்வாங்க பூஜை, கடந்த 20ம் தேதி காலை மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அன்று மாலை யாக பூஜை துவங்கியது.
மறுநாள் 21ம் தேதி வேதபாராயணத்தை தொடர்ந்து, இரண்டாம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாக பூஜையும், பஞ்சமுகார்ச்சனை, நவசக்தி அர்ச்சனை, மகா பூர்ணாஹூதி மற்றும் தீபாரதனை நடந்தது.
நேற்று முன்தினம் 22ம் தேதி அதிகாலை நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து, காலை 8 மணிக்கு, கடம் புறப்பாடாகி காலை 9:00 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அலங்காரம் மற்றும் சோடச உபசார பூஜை, சதுர்வேத பாராயணம், தேவாரம், சிவபுராணம் சமர்ப்பித்து தீபாராதனை நடந்தது. அன்று மாலை பிரம்மச்சாரி, கன்னிகா, சுகாசினி, தம்பதி பூஜைகளை தொடர்ந்து மூலவர் பரமாத்ம பிரம்மநாயகி உடனுறை ஆதீஸ்வரர் மூர்த்திக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
கும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று முதல் 48 நாள் மண்டலாபிஷேகம் துவங்கி நடைபெற்று வருகிறது.