உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 3 கிராமங்களுக்கு தாயான தட்சிணேஸ்வரி

3 கிராமங்களுக்கு தாயான தட்சிணேஸ்வரி

பொதுவாக ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு விதமான கிராம தேவதை இருப்பது வழக்கம். ஆனால், பெலகாவியில் உள்ள கோவில் ஒன்றில் அருள் பாலிக்கும் அம்மன், மூன்று கிராமங்களுக்கு காவல் தெய்வமாக திகழ்கிறார். ஆண்டு தோறும் இங்கு திருவிழாவும் நடக்கிறது.


பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா, கடகேரி கிராமத்தில் உள்ளது தட்சிணேஸ்வரி தேவி கோவில். அற்புதமான இந்தக் கோவில், பாதாமி சாளுக்கியர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அதன்பின் ஆட்சிக்கு வந்த மன்னர்கள், கோவிலை விரிவுப்படுத்தியதாக, வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தட்சிணேஸ்வரி தேவி, மஹாலட்சுமியின் அம்சமாகும். இக்கோவிலுக்கு மற்றொரு சிறப்பும் உள்ளது.


இந்தியாவிலேயே தெற்கு முகமாக அமைந்துள்ள மூன்றாவது கோவிலாகும். கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பொதுவாக ஒவ்வொரு கிராமத்திலும், தனித்தனி கிராம தேவதைகள் இருப்பது வழக்கம். ஆனால், தட்சிணேஸ்வரி தேவி, கடகேரி, நந்தகாவ் மற்றும் சிக்கட்டி என, மூன்று கிராமங்களுக்கு காவல் தெய்வமாக திகழ்கிறார். மூன்று கிராம மக் களும், இவரை தங்கள் தாயாக வணங்குகி ன்றனர். கோவிலில் தினமும் 3 வேளையும், சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இவரை தரிசித்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்காமல் மனம் நொந்த தம்பதியர், தட்சிணேஸ்வரி தேவி கோவிலுக்கு வந்து, பிரார்த்தனை செய்கின்றனர். குழந்தை பிறந்ததும் கோவிலுக்கு வந்து, தொட்டில் கட்டி வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்தவர்கள், கடன் தொல்லை, குழந்தை இல்லாமை, திருமண தடை உட்பட, பல பிரச்னைகளால் அவதிப்படும் மக்கள், தட்சிணேஸ்வரி கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்தால், பிரச்னைகள் சரியாகும் என்பது, மக்களின் நம்பிக்கை.


இங்குள்ள வழிபாடுகள் கஷ்டமானவை அல்ல. கோவிலுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு, மஞ்சள், குங்குமம், தேங்காய், பழம், வளையல்கள் போன்ற மங்கள பொருட்களை கொடுத்து, பக்தர்கள் பிரார்த்தனை செய்வது கோவிலின் ஐதீகமாகும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அதிகமாக வருகின்றனர். நெய் விளக்கு, எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி பூஜிக்கின்றனர். ஹிந்துக்கள் மட்டுமின்றி, அனைத்து மதத்தினருக்கும் கோவிலில் அனுமதி உண்டு. இது சமத்துவத்தை உணர்த்துகிறது. ஜாதி, மதம் பேதமின்றி அனைவரும் வணங்குவது, இக்கோவிலின் சிறப்பாகும்.


ஆண்டு தோறும் உகாதி பண்டிகையின் போது, தட்சிணேஸ்வரி தேவி கோவிலில் திருவிழா நடப்பது வழக்கம். இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர். இம்முறையும் உகாதி நெருங்குவதால், திருவிழாவுக்கு தயாராகின்றனர்.


எப்படி செல்வது?


பெங்களூரில் இருந்து, 564 கி.மீ., மங்களூரில் இருந்து 557 கி.மீ., மைசூரில் இருந்து 604 கி.மீ., பெலகாவியில் இருந்து 134 கி.மீ., தொலைவில், அதானி உள்ளது. அதானியில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் கடகேரி கிராமம் உள்ளது.

இக்கிராமத்தில் தட்சிணேஸ்வரி தேவி கோவில் அமைந்துள்ளது. கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் இருந்து, அதானிக்கு கே,எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் வாகனங்கள், வாடகை வாகனங்கள் வசதி உள்ளது. விமானத்தில் வருவோர், பெலகாவியில் இறங்கி, அங்கிருந்து வாடகை வாகனத்தில் கோவிலுக்கு செல்லலாம்.

தரிசன நேரம்: காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரை, மதியம் 3:30 முதல், இரவு 7:30 மணி வரை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !