மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெற்றிலைகாளி பாளையத்தில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
இங்குள்ள மகா சக்தி மாரியம்மன், செல்வவிநாயகர் கோவில், ஆகாய முனீஸ்வரன் கோவில் மற்றும் பரிவார தெய்வங்களான வைஷ்ணவி தேவி, கவுமாரி, துர்க்கை அம்மன் மற்றும் கர்ப்ப கிரகம், அர்த்தமண்டபம் ஆகியவை மறு சீரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.
மகாசக்தி மாரியம்மனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். பழமையான இக்கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை கோவை காமாட்சிபுரம் ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில், புனித தீர்த்தங்கள் அழைப்பு, கலைமகள், அலைமகள், மலைமகள் வழிபாடு, விநாயகர் வேள்வி, நவகிரக வழிபாடு, வாஸ்து வழிபாடு, நான்கு கால வேள்வி பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, மகா தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல், பக்தி சொற்பொழிவு, அலங்கார பூஜைகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.